என் மலர்
செய்திகள்

சேலம் என்ஜினீயர் வீட்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கின: லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
சேலம்:
சேலம் பேர்லேண்ட்ஸ் பெரியசாமி நகரை சேர்ந்தவர் ஜெயராமன்.
சேலம் கோட்ட பொறியாளராக பணியாற்றிய இவர் சென்னையில் நெடுஞ்சாலைத்துறையில் கட்டிடம் மற்றும் பராமரிப்பு பிரிவில் தலைமை என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
சொத்து குவிப்பு வழக்கு தொடர்பாக சென்னையில் உள்ள இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய போது ரூ.26 லட்சத்திற்கும் அதிகமான பணம் சிக்கியது.
இதையடுத்து சேலம் அழகாபுரம் பெரியசாமி நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்னையில் இருந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் 7 பேர் நேற்று வந்தனர்.அப்போது ஜெயராமன் அங்கு இல்லை. வேலைக்காரர்கள் 2 பேர் மட்டுமே இருந்தனர்.
ஒவ்வொரு அறையையும் அங்குலம், அங்குலமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்தனர். பின்னர் வீடு முழுவதையும் அளந்து மதிப்பீடும் செய்தனர். இதே போல அங்குள்ள அவரது வணிக வளாகமும் அளந்து மதிப்பீடு செய்யப்பட்டது.
இது தவிர அங்குள்ள அவரது அலுவலத்திலும் இந்த சோதனை நடந்தது. சுமார் 8 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் அவரது வீடு மற்றும் அலுவலங்களில் இருந்து முக்கிய ஆவணங்கள் மற்றும் பணத்தையும் லஞ்ச ஓழிப்பு போலீசார் கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
அந்த ஆவணங்களை வைத்து மேலும் வேறு எங்கெல்லாம் ஜெயராமனுக்கு சொத்து உள்ளது என்பது குறித்தும், வேறு எங்காவது பணத்தை பதுக்கி வைத்துள்ளாரா? என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.