என் மலர்
செய்திகள்

சோழவந்தானில் வீட்டின் கதவை உடைத்து ரூ.3 லட்சம் நகைகள் கொள்ளை
வாடிப்பட்டி:
சோழவந்தான் முதலியார் கோட்டை மேலத் தெருவைச் சேர்ந்தவர் ரவீந்திரநாத் (60). இவரது மனைவி மாலதி. மதுரை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கணவன் மனைவி இருவரும் சென்றுள்ளனர். பின்னர் மாலையில் வீடு திரும்பிய போது, வீட்டின் கதவு பூட்டை உடைத்து நகைகள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது.
இது குறித்து சோழ வந்தான் காவல் நிலையத்தில் ரவீந்திரநாத் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிரேஸ் சோபியாபாய், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணசாமி, கேசவ ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை செய்தனர். விசாரணையில் வைரத்தோடு, வைர மோதிரம், தங்க வளையல்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது இதன் மதிப்பு ரூ. 3.5 லட்சம் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். மேலும் பட்டப்பகலில் கொள்ளை நடந்ததால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை சோழ வந்தான் போலீசார் தேடி வருகின்றனர்.