என் மலர்tooltip icon

    செய்திகள்

    அன்னவாசல் அருகே கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த கற்சிலைகள் கண்டெடுப்பு
    X

    அன்னவாசல் அருகே கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த கற்சிலைகள் கண்டெடுப்பு

    அன்னவாசல் அருகே கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டன. அவைகள் பொதுமக்கள் பார்வைக்காக புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே விசலூர் பெரியகுளத்தில் உள்ள முட்புதருக்குள் கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்த கற்சிலைகள் கிடப்பதாக கலெக்டர் கணேசுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் கலெக்டர் கணேஷ் அந்த கற்சிலைகளை மீட்டு புதுக்கோட்டை அருட்காட்சியகத்தில் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    இதையடுத்து இலுப்பூர் வட்டாட்சியர் தமிழ்மணி, புதுக்கோட்டை அருங்காட்சியக காப்பாட்சியர் பக்கிரிசாமி தலைமையிலான குழுவினர் அந்த இடத்திற்கு சென்று சிலைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த பொதுமக்கள், இவைகள் எங்க ஊரு சாமி சிலைகள் என்றும், அந்த சிலைகளை எடுக்கக்கூடாது என்று கூறியும் தடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து அன்னவாசல் போலீசாருக்கு, அக்குழுவினர் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் தலைமையிலான போலீசார் வந்தனர்.

    பின்னர் போலீசார் பாதுகாப்புடன், கற்சிலைகளை சுற்றி இருந்த முட்புதர்கள் பொக்ளின் எந்திரத்தின் மூலம் அகற்றப்பட்டு, அந்த கற்சிலைகளை அதிகாரிகள் மீட்டனர்.

    இதில் சேஷ்டாதேவி சிலை, தெட்சிணாமூர்த்தி சிலை, பிரம்மா சிலை, நரசிம்மர் சிலை, துவாரபாலகர் சிலை, சண்டிகேஸ்வரர் சிலை, இந்திரன் சிலை, 3 நந்தி சிலைகள் என மொத்தம் 10 கற்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    பின்னர் அந்த கற்சிலைகள் அனைத்தும் போலீசார் பாதுகாப்புடன் இலுப்பூர் வட்டாட்சியர் தலைமையில், புதுக்கோட்டை அருங்காட்சியகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதுகுறித்து அந்த குழுவினர் கூறுகையில், இந்த கற்சிலைகளில் உள்ள கலை நுணுக்கங்களையும், வேலைபாடுகளையும் ஆராயும் போது, இவை கி.பி. 10-ம் நூற்றாண்டை சேர்ந்தாக இருக்கலாம் என்று தெரிவித்தனர். மேலும் அந்த கற்சிலைகள் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டன.
    Next Story
    ×