search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேனி மாவட்டத்தில் மணல் கடத்திய 8 டிராக்டர்கள் பறிமுதல்
    X

    தேனி மாவட்டத்தில் மணல் கடத்திய 8 டிராக்டர்கள் பறிமுதல்

    தேனி மாவட்டத்தில் மணல் கடத்திய 8 டிராக்டர்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி கிராவல் மண் மற்றும் ஆற்று மணல் திருட்டு மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கனிமவளத்துறை அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குனர் சாம்பசிவம் தலைமையில், வருவாய் ஆய்வாளர் சுருளியாண்டவர் மற்றும் அதிகாரிகள் கடந்த 10 நாட்களாக தீவிர ரோந்து மற்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதில் ஆண்டிபட்டி டி.சுப்பு லாபுரம், வண்ணாத்திபாறை, பெரியகுளம், குன்னூர், சின்னமனூர், ஆகிய பகுதியில் கிராவல் மண் திருடியதாக டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அதிகாரிகள் நேற்று திடீர் ரோந்து சென்றனர். அப்போது கோட்டைபட்டி பகுதியில் அனுமதியின்றி ஆற்று மணல் திருடி கொண்டு வந்த டிராக்டரை அதிகாரிகள் மடக்கி பிடித்து பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் தேனி தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் மணல் திருடியதாக டிராக்டரின் உரிமையாளர் கோட்டைப்பட்டியை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு அபராதம் விதிக்குமாறு பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியருக்கு ஆவணங்களை கனிமவளத்துறை அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.

    கடந்த 10 நாட்களாக கனிம வளத்துறை அதிகாரிகள் மேற் கொண்ட தொடர் நடவடிக்கையால் இதுவரை 8 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    Next Story
    ×