என் மலர்
செய்திகள்

மக்களின் எதிர்ப்பை சமாளிக்கவே பிரதமர் மோடி கண்ணீர் விட்டு நாடகமாடுகிறார்: சீமான் தாக்கு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கறுப்புப்பணத்தை ஒழிக்கவேண்டும் என்ற பிரதமர் மோடியின் கொள்கையில் எந்த முரண்பாடும் இல்லை ஆனால் அதைச் செயல்படுத்த அவர் எடுத்த நடவடிக்கையில் துளியும் உடன்பாடில்லை.
அவரின் அவசரகதியான முடிவால் நாட்டு மக்கள் அத்திவாசியத் தேவைகளுக்குக்கூடப் பணமில்லாது அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். நாட்டிலுள்ள 130 கோடி மக்களும் இதன் மூலம் நேரடியாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், இது எதையுமே அறியமுடியாமாய உலகிலிருக்கும் நமது பிரதமர், ஊழல் செய்தவர்கள் எல்லாம் வங்கி வாசலிலே நிற்பதாகவும் ஏழைகள் நிம்மதியாக உறங்குவதாகப் பிதற்றியிருக்கிறார்.
ஒட்டு மொத்த நாட்டு மக்களும் மிகுந்த சிரமத்திற் குள்ளாகி வாழ்க்கையை நகர்த்த முடியாது வேதனையின் விளிம்பில் நிற்கும் வேளையில் மோடியின் இதுபோன்ற அபத்தக் கூச்சல்கள் மக்கள் படும் துயரங்களை எள்ளி நகையாடுவதாக உள்ளது.
நாடு முழுமைக்கும் முதியவர்கள், விவசாயிகள், அன்றாடங்காய்ச்சிகள், மாத சம்பளத்திற்கு வேலை செய்யும் ஊழியர்கள் எனச் சமூகத்தின் அங்கமாக இருக்கும் பல கோடி மக்களும் மிகுந்த அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 5 நாட்களில் மட்டும் இதுவரை 16 பேர் பலியாகியிருக்கிறார்கள். ஆனால், நமது பிரதமரோ இது எதனையும் சிறிதும் கவனத்திற்கொள்ளாமல் உண்மைக்கு மாறாகப் பேசி கட்டமைக்க முயல்வது மிகுந்த கண்டனத்திற்குரியது.
தனது தான்தோன்றித் தனமான முடிவால் நாடு முழுமைக்கும் மக்களிடம் ஏற்பட்டிருக்கும் எதிர்ப் பலையைச் சமாளிக்கவே மேடையில் கண்ணீர் சிந்தி, வீட்டைத் துறந்து தான் வாழ்வதாகக் கூறி நாடகமாடி நடிப்புத் திறமையை வெளிக் காட்டுகிறார் பிரதமர் மோடி.
தனியார்மயத்தைத் தளர்த்தி, தாராளமயத்தைத் தளர்த்தி, தற்சார்பு பொருளாதாரக் கொள்கையைக் கொண்டு வந்து, மண்ணின் வளம் மக்களுக்கானது என்ற நிலை வரும் பொழுது தான் இந்நாட்டில் சமநிலை சமுதாயம் உருவாகி கருப்புப் பணம் ஒழியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.