search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்கத்தை பணயம் வைத்து பழைய நோட்டு வியாபாரம்
    X

    தங்கத்தை பணயம் வைத்து பழைய நோட்டு வியாபாரம்

    சென்னையில் தங்கத்தை பணயம் வைத்து பழைய நோட்டு வியாபாரம் ஒரு கிராமுக்கு 2 ஆயிரம் கூடுதல் கிடைக்கிறது.

    சென்னை:

    ரூ.1000, 500 நோட்டுக்களை ஒழித்து கறுப்பு பணத்துக்கு முடிவு கட்ட மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

    பையில் சில ஆயிரம், ஐநூறு நோட்டுக்களை வைத்திருக்கும் சாமானிய மக்கள் அதை மாற்ற வங்கிகளில் காத்து நிற்கிறார்கள்.

    ஆனால் கட்டு கட்டாக பதுக்கி வைத்திருப்பவர்கள் அதை எப்படி மாற்றுவது? என்று தூக்கமின்றி யோசித்து கொண்டிருக்கிறார்கள்.

    ஹவாலா ஏஜெண்டுகள் 30 சதவீத கமி‌ஷனுக்கு எத்தனை கோடிகள் வேண்டுமானாலும் மாற்றி தருகிறோம் என்று பெரும்புள்ளிகளை பணயமாக வைத்து ஒரு நூதன வியாபாரம் ஜரூராக நடந்து வருகிறது.

    தங்கம் விற்பனையில் திரைமறைவு புள்ளிகள் பலர் இருக்கிறார்கள்.

    பல நகை கடைகளில் ரூ.1000, 500 ரூபாய் நோட்டுகள் வாங்குவதில்லை என்று அறிவிப்பு எழுதி வைத்துள்ளார்கள். இதனால் நகை வியாபாரம் குறைந்துள்ளது.

    ஆனால் ரகசியமாக ஒரு சில இடங்களில் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு தங்கம் விற்கிறார்கள். அதாவது மார்க்கெட் நிலவரத்தை விட ஒரு கிராமுக்கு ரூ.1500 முதல் 2 ஆயிரம் வரை கூடுதலாக விலை வாங்குகிறார்கள்.

    அதாவது மார்க்கெட் நிலவரப்படி ஒரு கிலோ தங்கம் ரூ.32 லட்சம் விலைக்குதான் விற்கப்பட வேண்டும். ஆனால் ரூ.1000, 500 நோட்டுகள் என்றால் ரூ.45 லட்சத்துக்கு விற்கிறார்கள்.

    பெரும் பணக்காரர்கள், உயர் அதிகாரிகள், பெரிய வியாபாரிகள் தங்களிடம் இருக்கும் பழைய நோட்டுகளை அதிக விலை கொடுத்து தங்கமாக மாற்றி வருகிறார்கள்.

    இதேபோல் பழைய தங்க நகைகளை வாங்குவதிலும் புதுயுக்தியை கையாளுகிறார்கள். ரூ.1000, 500 நோட்டுகளாக பெற்றுக் கொள்வதாக இருந்தால் பழைய நகைகளுக்கும் கிராம் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வரை கூடுதலாக கொடுத்து வாங்கி கொள்கிறார்கள்.

    உதாரணத்துக்கு 100 கிராம் பழைய தங்கத்தை விற்றால் தற்போதைய விலையை விட கூடுதலாக ரூ.1½ லட்சம் முதல் 2 லட்சம் வரை கிடைப்பதால் தங்க நகை விற்பனையிலும் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    சில மாதங்கள் கழித்து தங்கம் விலை குறையும்போது அதிகமாக தங்க நகை வாங்கி கொள்ளலாம் என்பது அவர்கள் ஆசை.

    Next Story
    ×