என் மலர்
செய்திகள்

தண்டவாளத்தில் மண்சரிவு: ஊட்டி மலை ரெயில் நடுவழியில் நிறுத்தம்
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினமும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்து இயற்கை அழகை ரசித்து சென்று வருகிறார்கள்.
வழக்கம் போல் இன்று காலை மேட்டுப்பாளையத்தில் இருந்து 7.30 மணிக்கு 100-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளுடன் மலை ரெயில் ஊட்டிக்கு புறப்பட்டது. அப்போது மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரெயில் தண்டவாளத்தில் கல்லார்- ஹில்குரோ ரெயில் நிலையங்களுக்கிடையே மழையின் காரணமாக 3 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து ரெயில் கல்லார் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டது. ரெயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மண்சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த பணி முடிவடைந்த பின்பு மலை ரெயில் வழக்கம் போல் புறப்பட்டு செல்லும். நடுவழியில் ரெயில் நிற்பதால் சுற்றுலா பயணிகள் அவதியடைந்துள்ளனர்.