என் மலர்tooltip icon

    செய்திகள்

    முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்குகளை 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு
    X

    முன்னாள் அமைச்சருக்கு எதிரான வழக்குகளை 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க ஐகோர்ட்டு உத்தரவு

    போக்குவரத்து கழகங்களில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்குகளை 4 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்கவேண்டும் என்று தமிழக போலீசாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    நான் அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் பணிபுரிந்தேன். அரசுப் போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கித்தருவதாகக்கூறி 200-க்கும மேற்பட்டவர்களிடம் ரூ.425 கோடியை வசூலித்து, முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், அவரது உதவியாளர்கள் மூலமாக கொடுத்தேன்.

    ஆனால், அவர்கள் கூறியபடி யாருக்கும் வேலை வாங்கித்தரவில்லை. பணத்தை கேட்டதற்கு செந்தில் பாலாஜியும், அவரது ஆட்களும் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதேப்போல் பாதிக்கப்பட்ட ஒருவர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததன்பேரில், செந்தில்பாலாஜிக்கு எதிரான மோசடி புகார் மீது விசாரணை நடத்த சென்னை குற்றப்பிரிவு பிரிவு துணை கமிஷனருக்கு உத்தரவிடப்பட்டது.

    இதேப்போல வேறு பலரிடம் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணமோசடியில் ஈடுபட்டதால் செந்தில் பாலாஜி மீது பல கிரிமினல் வழக்குகள் பதிவாகி உள்ளன. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கை விசாரித்து சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவில், ‘குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது’ என்று கூறியுள்ளது.

    தற்போது நடைபெற உள்ள அரவக்குறிச்சி தொகுதிக்கான தேர்தலில், செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். குற்றப்பின்னணி உள்ள அவரது வேட்புமனுவை நிராகரிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் கடந்த மாதம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். அதேநேரம், செந்தில்பாலாஜி மீது பதிவான வழக்குகளின் நிலவரத்தை தெரிவிக்கும்படி, தமிழக போலீசுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

    இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது, போலீஸ் தரப்பில் சீலிடப்பட்ட கவரில், நிலை அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘செந்தில்பாலாஜிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடைபெறுகிறது. இந்த விசாரணையை முடிக்க கூடுதல் காலஅவகாசம் வேண்டும்’ என்று கூறினார்.

    இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ‘செந்தில்பாலாஜிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு பதிவான குற்ற வழக்குகளை போலீசார் 4 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முடிக்கவேண்டும். அதன்பின்னர் 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட கோர்ட்டுகளில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர்.
    Next Story
    ×