என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜெயலலிதா பூரண உடல் நலத்துடன் உள்ளார்: பொன்னையன் தகவல்
    X

    ஜெயலலிதா பூரண உடல் நலத்துடன் உள்ளார்: பொன்னையன் தகவல்

    ‘முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண உடல்நலத்துடன் உள்ளார்’ என்று முன்னாள் அமைச்சர் பொன்னையன் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் செப்டம்பர் 22-ந் தேதி உடல்நல குறைவு காரணமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதா விரைவில் உடல்நலம் பெறவேண்டி தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    அவருக்கு அப்பல்லோ டாக்டர்கள் குழுவினருடன், லண்டனை சேர்ந்த டாக்டர் ரிச்சர்டு பீலே, டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, சதீஷ் நாயக், சிங்கப்பூர் பிசியோதெரபி நிபுணர்கள் மேரி சியாங், சீமா, ஜூடி ஆகியோரும் சிகிச்சை அளித்துள்ளனர். தொடர் சிகிச்சையால் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

    அவர் வழக்கமான உணவுகளை சாப்பிடுவதாகவும், செயற்கை சுவாசம் இல்லாமல் நன்றாக சுவாசிப்பதாகவும் அப்பல்லோ டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் உடல்நலம் தேறி வீடு திரும்ப வேண்டி நேற்று ஆஸ்பத்திரி முன்பு அ.தி.மு.க.வினர் விசேஷ பூஜை நடத்தினர். காளி பகவதி அம்மனுக்கு 108 தேங்காய்களில் நெய்தீபம் ஏற்றி அ.தி.மு.க.வினர் வழிபட்டனர். அம்மன் சிலைக்கு பால் அபிஷேகம் நடத்தினர்.

    ஜெயலலிதா கையெழுத்திட்ட அறிக்கை வெளியானதையொட்டி அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அப்பல்லோ ஆஸ்பத்திரி முன்பு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தர்மபுரி பாதிரியார் டேனியல் பச்சையப்பன் தலைமையில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்.

    முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக வந்த முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. அமைப்பு செயலாளருமான சி.பொன்னையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கை அளப்பரிய மகிழ்ச்சி அலையை உருவாக்கி உள்ளதை தமிழகம் கண்டுகொண்டிருக்கிறது. முதல்-அமைச்சர் பூரண உடல் நலத்துடன் இருக்கிறார். இந்த தகவலை அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் குழு அறிக்கை மூலம் தெளிவுபடுத்தியுள்ளனர்.

    உலகளவில் மிகச்சிறந்த சிகிச்சையை அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் குழுவும், லண்டன் மற்றும் சிங்கப்பூர் மருத்துவ நிபுணர்களும் அவருக்கு வழங்கியுள்ளனர். இதன் காரணமாக அவர் பரிபூரண உடல்நலம் பெற்றுள்ளார்.

    தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றிபெறும். தமிழகத்துக்கான ஒரு நல்ல எதிர்காலத்தை வித்திடுகிற தேர்தலாக இது அமைய உள்ளது.

    முதல்-அமைச்சரின் பரிபூரண உடல்நிலைக்கு காரணமாக இருந்த பிரார்த்தனை செய்த மக்களுக்கும், சிகிச்சை அளித்த டாக்டர் குழுவுக்கும் நான் கட்சி சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    எந்த வார்டில் இருந்தாலும் சிகிச்சையில் மாற்றம் இல்லை என்றும், வீடு திரும்புவது குறித்து முதல்-அமைச்சர் தான் முடிவு செய்வார் என்றும் ஏற்கனவே அப்பல்லோ ஆஸ்பத்திரி தலைவர் குறிப்பிட்டுள்ளார். இப்போது இது ஒரு பிரச்சினையே இல்லை. லண்டன் டாக்டர் மீண்டும் வரவேண்டிய அளவுக்கு ‘அம்மா’வின் உடல்நிலையில் இப்போது எந்த பிரச்சினையும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×