என் மலர்
செய்திகள்

பணம் எடுப்பதில் உள்ள சிரமத்தை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்
மதுரை:
மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இடைத்தேர்தலை ஜனநாயக முறைப்படி நடத்த தேர்தல் கமிஷன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தலில் பணப்பட்டு வாடா நடந்து வருகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களும் முழு மூச்சுடன் இதில் ஈடுபட்டு பணப்பட்டு வாடாவை தடுத்து நிறுத்த வேண்டும்.
விஜயகாந்த் மக்கள் நலக்கூட்டணியில் இருந்து விலகி விட்டார். இது காலம் கடந்த ஞானோதயமாகும். இது நல்ல முடிவு. பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து கொள்ள அவர் விரும்பினால் அதுபற்றி பரிசீலிக்கப்படும்.
மத்திய அரசின் திட்டம் பற்றி தேர்தல் பிரசாரத்தில் கூறி வருகிறோம். தற்போது மத்திய அரசின் திட்டம் மறைக்கப்பட்டு வருகிறது. இது தகுந்த நேரத்தில் மக்களுக்கு தெரியவரும்.
கருப்பு பணம் ஒழிப்பு கிராம மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவர்கள் இதை பாராட்டுகிறார்கள். மீத்தேன் திட்டத்தை ஆரம்பத்தில் இருந்தே செயல்படுத்தாது என்று மத்திய அரசு கூறி வந்தது. இந்த திட்டத்தில் கையெழுத்திட்ட தி.மு.க.வே நாங்கள் கொடுத்த அழுத்தத்தால்தான் இந்த திட்டம் கைவிடப்பட்டு இருப்பதாக கூறி வருவது கேலிக்கூத்தாக இருக்கிறது.
இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. கருப்பு பணம் ஒழிப்பு குறித்து ப.சிதம்பரம் கூறிய கருத்து தவறானது. மேலும் பணம் எடுப்பதில் தற்போது ஏற்பட்டுள்ள சிரமத்தை பொதுமக்கள் பொறுத்து கொள்ள வேண்டும். இது விரைவில் நிவர்த்தியாகி விடும்.
இவ்வாறு அவர் கூறினார்.