search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணம் எடுக்க ஏ.டி.எம். மையங்களில் குவிந்த பொதுமக்கள்
    X

    பணம் எடுக்க ஏ.டி.எம். மையங்களில் குவிந்த பொதுமக்கள்

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
    ஊட்டி:

    கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தவும், கருப்பு பணத்தை ஒழிக்கவும் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது. மேலும் பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதனால் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் நேற்று 2–வது நாளாக வங்கியில் குவிந்தனர்.

    ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர், கூடலூர், பந்தலூர் தாலுகாவில் உள்ள வங்கிகளில் கூட்டம் அலைமோதியது. மேலும், புதிய ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது. அவர்கள் விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து கொடுத்து, புதிய ரூபாய் நோட்டுகளை மகிழ்ச்சியுடன் பெற்று சென்றனர். பெரும்பாலும் 2,000 ரூபாய் நோட்டுகளே வழங்கப்பட்டன. பலர் குழந்தைகளுடன் வங்கிக்கு வந்து நீண்ட வரிசையில் நின்று பணத்தை பெற்று சென்றனர்.

    வங்கி ஏ.டி.எம்.கள் நேற்றுக்காலை முதல் செயல்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏ.டி.எம்.கள் நேற்று மதியம் வரை செயல்படவில்லை. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது வங்கி கணக்கில் இருந்து பணத்தை பெற முடியாமல் திண்டாடினார்கள். ஊட்டி நகரில் ஒரு சில ஏ.டி.எம். மையங்களில் மதியத்திற்கு மேல் பணம் நிரப்பப்பட்டு ஏ.டி.எம். மையங்கள் திறக்கப்பட்டன.

    இதனை அறிந்த பொதுமக்கள் அந்த ஏ.டி.எம். மையங்கள் முன்பு நீண்ட வரிசையில் நின்று பணம் எடுத்து சென்றனர். மேலும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தனர். இதேபோல் தபால் நிலையங்களிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் டோக்கன் வழங்கப்பட்டு, பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் மாற்றி கொடுக்கப்பட்டன.

    ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.4 ஆயிரம் வரை பணம் மாற்றி கொடுக்கப்பட்டது. ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.2 ஆயிரம் வரை பணம் எடுக்க முடிந்தது.
    Next Story
    ×