என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
    X

    புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்

    டீசல் வாங்க பணம் இல்லாததால் புதுக்கோட்டை விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

    அறந்தாங்கி:

    நாடு முழுவதும் ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திரமோடி அறிவித்தார். இதையடுத்து வங்கிகளில் புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுக்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.

    ஆனால் இந்த பணம் போதிய அளவில் பொதுமக்களை சென்று அடைவதில்லை. இதனால் நடுத்தர, சிறு, குறு தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களுக்கு தேவையான பணத்தை பெறுவதில் பெரும் சிக்கலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்தநிலையில் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைபட்டினம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். அவர்கள் பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மாற்றி படகுகளுக்கு தேவையான டீசல் வாங்குவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வங்கிகளிலும் போதிய அளவு பணபரிவர்த்தனை நடைபெறாததால் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து வருகின்றனர்.

    இதனை கண்டித்து இன்று முதல் புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், கோட்டைப்பட்டினம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இப்பகுதியில் இருந்து சுமார் 700 -க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    மீன்பிடி தொழிலின் மூலம் நேரிடையாக மற்றும் மறைமுகமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்து வருகின்றனர். அவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இங்கு பிடிக்கப்படும் மீன்கள் தூத்துக்குடி, புதுக்கோட்டையைச் சேர்ந்த மொத்த வியாபாரிகள் மற்றும் சில்லறை வியாபாரிகள் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. உயர்ரக மீன்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது காலவரையற்ற வேலை நிறுத்தத்தால் சுமார் நாள் ஒன்றுக்கு நேரிடையாக மற்றும் மறைமுகமாக ரூ.70 லட்சம் வர்த்தகம் பாதிக்கப்படும் என தெரிகிறது. இந்நிலையை போக்க வங்கிகள் போதிய பண பரிவர்த்தனை செய்ய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×