என் மலர்

  செய்திகள்

  2-வது நாளாக ஏ.டி.எம். மையங்கள் முடங்கியதால் பணம் கிடைக்காமல் மக்கள் அவதி
  X

  2-வது நாளாக ஏ.டி.எம். மையங்கள் முடங்கியதால் பணம் கிடைக்காமல் மக்கள் அவதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை உள்ளிட்ட முக்கிய பெருநகரங்களில் ஏ.டி.எம். மையங்கள் 2-வது நாளாக முடங்கியதால் பொதுமக்கள் பணத்துக்காக அலைமோதும் நிலைமை தொடர்ந்து வருகிறது.
  சென்னை:

  ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த மத்திய அரசு அந்த ரூபாய் நோட்டுகளை அடுத்த மாதம் (டிசம்பர்) 30-ந்தேதி வரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது.

  இதையடுத்து நாடெங்கும் மக்கள் வங்கிகளுக்கு சென்று ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கொடுத்து புதிய ரூ.2000 நோட்டை பெற்று வருகிறார்கள். இதற்காக வங்கிகள் விடுமுறை தினமான இன்றும், நாளையும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை, பெங்களூர், திருவனந்தபுரம் உள்பட முக்கிய நகரங்களில் மக்கள் தினமும் வங்கிகளை முற்றுகையிட்டபடி உள்ளனர். இன்று (சனிக்கிழமை) மூன்றாவது நாளாக மக்கள் வங்கிகளில் பழைய நோட்டுகளை மாற்ற திரண்டனர்.

  அரசு ஊழியர்களுக்கு இன்று விடுமுறை என்பதால் இன்று வங்கிகளுக்கு வந்த பொதுமக்கள் எண்ணிக்கை கடந்த 2 நாட்களை விட மிகவும் அதிகமாக இருந்தது. கடந்த 2 நாட்களுடன் ஒப்பிடுகையில் இன்று வங்கிகளுக்கு இரட்டிப்பு அளவு மக்கள் வந்திருந்தனர்.

  அவர்களை கையாள வங்கி ஊழியர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

  இதற்கிடையே ஏ.டி.எம்.கள் சேவையை புதன், வியாழக்கிழமைகளில் நிறுத்தி வைத்திருந்த மத்திய அரசு நேற்று முதல் ஏ.டி.எம். சேவை தொடங்கும் என்று அறிவித்திருந்தது. ஏ.டி.எம்.களில் புதிய ரூபாய் நோட்டுகளை நிரப்புவதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக முதலில் கூறப்பட்டது.

  எனவே புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் ஏ.டி. எம்.மில் கிடைக்கும் என்று மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் ஏ.டி.எம்.களில் புதிய ரூபாய் நோட்டுகள் வைப்பதற்கு ஏற்ப இன்னும் “புரோகிராம்“ செய்யப்படவில்லை. இதனால் நேற்று முதல் நாள் ஏ.டி.எம். மையங்களுக்கு சென்றவர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

  இதற்கிடையே ஏ.டி.எம்.களில் ரூ.50, ரூ.100 நோட்டுகள் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது. போதுமான அளவுக்கு ரூ.100 நோட்டுகள் இருப்பதால் மக்கள் அவசரமின்றி பணத்தை எடுத்துச் செல்லலாம் என்றும் அறிவிப்பு வெளியிட்டனர். எனவே சில்லரை பணமாவது கிடைக்குமா? என்று மக்களிடம் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

  ஆனால் திட்டமிட்ட முன் ஏற்பாடுகள் சரிவர எதுவும் செய்யப்படவில்லை. இதனால் நாடெங்கும் நேற்று ஏ.டி.எம். மையங்கள் செயல்படாமல் முடங்கின. காலையிலே ஏ.டி.எம். மையங்களில் குவிந்த மக்கள், ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்படாததைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்தனர்.

  நேற்று மதியம் வரை பல ஏ.டி.எம்.களில் போதுமான அளவுக்கு பணம் நிரப்பப்படவில்லை. சில வங்கிகளின் ஏ.டி.எம்.களில் மட்டுமே பணம் நிரப்பப்பட்டு இயக்கப்பட்டது. அந்த ஏ.டி.எம். மையங்களில் மக்கள் அதிகமாக வந்ததால் சிறிது நேரத்திலேயே பணம் தீர்ந்து வறண்டு போனது.

  எனவே ஏ.டி.எம்.களை நம்பி இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் நேற்று கடும் அவதிக்குள்ளானார்கள். தங்களது பணத்தை எடுக்க ஏ.டி.எம். மையங்களில் மணிக்கணக்கில் நிற்க வேண்டியதுள்ளதே என்ற கோபம் மக்களிடம் ஏற்பட்டது. திட்டமிட்டபடி ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்பட்டு இருந்தால் மக்களுக்கு ஏற்பட்ட இந்த அசவுகரியத்தை தவிர்த்து இருக்கலாம் என்று கூறப்பட்டது.

  இந்த நிலையில் இரண்டாவது நாளான இன்று ஏ.டி.எம்.கள் முழு அளவில் செயல்பாட்டுக்கு வந்து விடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. எப்படியாவது ஏ.டி.எம்.மில் பணம் எடுத்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் மக்கள் இன்று அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்றனர்.

  ஆனால் ஏ.டி.எம்.கள் இன்றும் செயல்படவில்லை. சில ஏ.டி.எம்.கள் தவிர 99 சதவீத ஏ.டி.எம்கள் முடங்கின. ஏற்கனவே 9, 10-ந்தேதிகளில் ஏ.டி.எம்.களை அரசு உத்தரவிட்டு மூடியது. 11, 12-ந்தேதிகளில் ஏ.டி.எம்.கள் திட்டமிட்டபடி செயல்படவில்லை.

  மொத்தத்தில் இன்றுடன் 4 நாட்களாக ஏ.டி.எம்.கள் செயல்படாமல் உள்ளன. இதனால் நாடெங்கும் உள்ள மக்கள் மிகுந்த தவிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள்.

  மிக, மிக குறைந்த அளவு ஏ.டி.எம்.கள்தான் இயங்குகின்றன. அதிலும் ரூ.100 நோட்டுகள் மட்டுமே வருகிறது. அதுவும் உடனுக்குடன் தீர்ந்து விடுகிறது.

  இதனால் ஏ.டி.எம். மையங்களை நாடி வந்தவர்கள், அதை நம்பாமல் மாற்று ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். ஏ.டி.எம்.கள் கை கொடுக்காததால் இன்று அனைத்து தரப்பினரும் வங்கிகளுக்கு படையெடுத்தனர். இதனால் வங்கிகளில் இன்று மக்கள் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு மாறியது.

  ஏ.டி.எம்.களில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் நீங்குவதற்கு இன்னும் ஒரு வாரம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக அனைத்து வங்கிகளின் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாசலம் “மாலைமலர்” நிருபரிடம் கூறியதாவது:-

  மத்திய அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ள ரூ.500, ரூ.2000 நோட்டுகள் வைப்பதற்கு ஏ.டி.எம். எந்திரங்களில் இன்னமும் மாற்றங்கள் செய்யப்படவில்லை. அது போல மாற்று ஏற்பாடான ரூ.50 நோட்டுகள் வைப்பதற்கு ஏற்ப மாற்றங்களும் ஏ.டி.எம். எந்திரங்களில் முழுமையாக செய்யப்படவில்லை.

  இந்த காரணத்தால்தான் நாடெங்கும் ஏ.டி.எம்.களில் 100 ரூபாய் நோட்டுகள் மட்டும் நிரப்பப்பட்டு இயக்கப்படுகிறது. இதன் காரணமாக தற்போதைய குழப்பமும், பிரச்சினைகளும் ஏற்பட்டுள்ளன.

  ஏ.டி.எம். எந்திரங்களில் ரூ.100 நோட்டுகள் மட்டுமே வைக்கப்படுவதால் எந்திரங்கள் செயல்பாடு அதிகமாகிறது. ஒரு வாடிக்கையாளர் ரூ.2000 எடுத்தால் முன்பெல்லாம் இரண்டு 2 ஆயிரம் ரூபாய் நோட்டு அல்லது 4 ஐநூறு ரூபாய் நோட்டுகளை சில வினாடிகளில் எந்திரங்கள் எடுத்துக் கொடுத்து விடும்.

  ஆனால் தற்போது ஒருவர் ரூ.2 ஆயிரம் எடுக்கும் பட்சத்தில் 20 நூறு ரூபாய் நோட்டுகளை எடுக்க வேண்டும். இது சற்று கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்ளும்.

  அது மட்டுமின்றி எல்லோருக்குமே ரூ.100 நோட்டுகள் மட்டுமே கொடுக்கப்படுவதால், ஏ.டி.எம். எந்திரங்களுக்குள் நிரப்பப்படும் ரூ.100 நோட்டுகள் சிறிது நேரத்திலேயே தீர்ந்து விடுகிறது. குறிப்பாக ஒரு எந்திரத்தில் அதிகபட்சமாக 200 பேர் வரைதான் பணம் எடுக்க முடியும். அதன் பிறகு பணம் தீர்ந்து விடும்.

  தற்போது ஒவ்வொரு ஏ.டி.எம்.மிலும் ஆயிரக்கணக்கானவர்கள் திரள்வதால் அனைவருக்கும் பணம் கிடைக்காத சூழ்நிலை ஏற்படுகிறது.

  இதற்கிடையே ரிசர்வ் வங்கியிடம் இருந்து ஏ.டி. எம்.களில் வைப்பதற்கு மிகவும் குறைந்த அளவு ரூ.100 நோட்டுகளே வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ரூ.100 நோட்டுகள் மிக குறைந்த அளவே அனுப்பப்பட்டுள்ளன.

  இன்னும் கூட சில ஏ.டி.எம்.களுக்கு ரூ.100 நோட்டுகள் முழுமையாக சென்று சேரவில்லை. ஏ.டி.எம்.கள் செயல்படாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும். எனவே ரூ.100 நோட்டுகள் அதிகமாக வந்தால்தான் தற்போதைய பிரச்சினைகளை தீர்க்க முடியும்.

  ரூ.100 நோட்டுகள் உடனுக்குடன் தீர்ந்து விடும் நிலையில் ரூ.500, ரூ.2000 புதிய நோட்டுகள் ஏ.டி.எம்.களில் வழங்கப்பட்டால்தான் பிரச்சினை தீரும். அதற்கு இன்னும் ஒரு வாரம் வரை ஆகலாம். அதுவரை ஏ.டி.எம்.களில் மக்களுக்கு முழுமையாக பணம் கிடைக்காது.

  புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்த மத்திய அரசு, அந்த ரூபாய் நோட்டு களை ஏ.டி.எம்.களில் சீராக வினியோகம் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. முன் யோசனை இல்லாமல் இப்படி செயல்பட்டுள்ளனர்.

  இதனால்தான் ஏ.டி.எம்.களில் மக்கள் பணம் எடுக்க முடியாமல் திணறி வருகிறார் கள். ஏ.டி.எம்.களை சீர்படுத்தும் வரை மக்களின் அவதி தொடரத்தான் செய்யும்.

  இவ்வாறு அனைத்து வங்கிகள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கூறினார்.

  இந்த நிலையில் புதிய ரூபாய் நோட்டுகள் போதுமான அளவுக்கு கை இருப்பு இருப்பதாகவும், எனவே மக்கள் பீதி அடைய தேவையில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் ஏ.டி.எம்.களை வழக்கமான செயல்பாட்டுக்கு கொண்டு வர வங்கிகளுக்கு சில நாட் கள் ஆகும் என்பதால் பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

  ஏ.டி.ம்.களில் ஒவ்வொரு வரும் தற்போது தலா ரூ.2 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும். 18-ந்தேதி வரை அதாவது இன்னும் ஒரு வாரத்துக்கு ஏ.டி.எம்.களில் ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும்.

  19-ந்தேதியில் இருந்து தினமும் ரூ.4 ஆயிரம் வரை எடுக்கலாம். சில தினங்களுக்கு இந்த உச்ச அளவு அமலில் இருக்கும். சுமார் 1 மாதம் கழித்தே ஏ.டி.எம்.கள் செயல்பாடு முழுமையான சகஜ நிலைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

  Next Story
  ×