என் மலர்
செய்திகள்

அரியலூர்-பெரம்பலூரில் விடிய, விடிய பலத்த மழை
அரியலூர்:
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக சுட்டெரித்த வெயிலின் தாக்கம் குறைந்து இதமான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
அந்தமான் அருகே கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும், தென் மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதாலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
சம்பா சாகுபடிக்காக மழையை நம்பியிருந்த விவசாயிகள் இதனால் சற்றே திருப்தியடைந்துள்ளனர். இந்த மழை தொடர்ந்து நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தற்போது அந்தமான் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக திருச்சி, அரியலூர், புதுக்கோட்டை, கரூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பரவலான மழை காணப்பட்டது. இதனால் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இரவு விடிய, விடிய பலத்த மழை பெய்தது.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் 13 மி.மீ, சித்தமல்லி 8 மி.மீ, குருவாரி 13 மி.மீ, பெரம்பலூர் மாவட்டத்தில் 10 மி.மீ, செட்டிக்குளம் 2 மி.மீ, பாடாலூர் 4 மி.மீ, புதுக் கோட்டை மாவட்டத்தில் 6.1 மி.மீ, ஆலங்குடி 8 மி.மீ, நாகுடி 4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.
திருச்சி, கரூர் மாவட்டங்களில் வானம் மேக மூட்டத்துடன் குளிர்ச்சியான நிலை காணப்படுகிறது. இந்த பருவ மழை தொடர்ந்து பெய்தால் விவசாயம் நல்ல முறையில் செய்ய முடியும் என விவசாயிகள் கூறினர்.
திருவாரூர் மாவட்டத்திலும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது.நாகையில் இன்று அதிகாலை 3.30 மணி முதல் காலை 6 மணி வரை பலத்த மழை பெய்தது.
வேதாரண்யம், சீர்காழியிலும் இரவு பலத்த மழை கொட்டியது. மழை காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
வலங்கைமான் -28.2
குடவாசல் - 46.8
மயிலாடுதுறை - 46.5
மஞ்சளாறு - 26.6
மணல்மேடு - 8.4
சீர்காழி - 37.7
கோரையாறு - 16.2
திருவாரூர் - 23.2
நாகை - 136.1
தலைஞாயிறு - 58.1
திருப்பூண்டி - 62.4
வேதாரண்யம் - 48.1
பூதலூர் 13.8
வெட்டிக்காடு - 11.3
ஆயக்குடி - 14.4
ஒரத்தநாடு - 8.4
மதுக்கூர் - 8.6
பட்டுக்கோட்டை - 8.5






