என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை புறநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்
    X

    சென்னை புறநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

    சென்னை நகரின் நுழைவு வாயிலான பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
    தாம்பரம்:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வந்த தென்மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் சென்றனர். இதற்காக சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    தீபாவளி பண்டிகை முடிந்து நேற்று மாலை முதல் சென்னைக்கு தென் மாவட்டத்தில் இருந்து வாகனங்களில் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

    இன்று வேலை நாள் என்பதால் நேற்று ஒரே நாளில் ஏராளமானவர்கள் சென்னைக்கு புறப்பட்டு வந்தனர்.

    இதனால் இன்று அதிகாலை முதலே சென்னை நகரின் நுழைவு வாயிலான பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

    கூடுவாஞ்சேரியில் இருந்து பெருங்களத்தூருக்கு வழக்கமாக 15 நிமிடத்தில் சென்று விடலாம். ஆனால் இன்று காலை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் சுமார் 2 மணி நேரத்துக்கு மேலாக வாகனங்கள் நகராமல் அப்படியே நின்றன. இதனால் பணிக்கு செல்பவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதியுற்றனர்.

    வெளியூரில் இருந்து வந்த வாகனங்கள் பெருங்களத்தூரில் இருந்து மதுரவாயல் புறவழிச்சாலை வழியாக கோயம்பேட்டிற்கு சென்றன. தாம்பரம், கிண்டி, பல்லாவரம் சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்பவர்கள் பெருங்களத்தூரில் இறங்கி மாற்று வாகனங்களில் சென்றனர். இதனால் பெருங்களத்தூர் பஸ்நிலையம் அதிகாலையிலேயே பரபரப்பாக காணப்பட்டது. ஷேர் ஆட்டோ, வாகனங்களால் அங்கும் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

    போக்குவரத்து நெரிசலால் அவதி அடைந்த பயணிகள் பலர் பெருங்களத்தூரில் இருந்து மின்சார ரெயில்களில் பயணம் செய்தனர். இதனால் ரெயில் நிலையத்திலும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மதியம் 12 மணிக்கு பிறகே போக்குவரத்து சீரானது.
    Next Story
    ×