search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடிமருந்துகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட டெம்போவை படத்தில் காணலாம்
    X
    வெடிமருந்துகளுடன் பறிமுதல் செய்யப்பட்ட டெம்போவை படத்தில் காணலாம்

    களியக்காவிளையில் டெம்போவில் கடத்திச் சென்ற 850 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல்

    களியக்காவிளையை அடுத்த கல்லுக்கட்டி பகுதியில் இன்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் டெம்போவில் கடத்திச் சென்ற 850 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    களியக்காவிளை:

    களியக்காவிளையை அடுத்த குழித்துறை கல்லுக்கட்டி பகுதியில் இன்று அதிகாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது ஒரு டெம்போ அந்த வழியாக வேகமாக வந்தது. போலீசார் டெம்போவை தடுத்து நிறுத்தினர். அதனை சோதனை செய்த போது, 41 பார்சல்கள் இருந்தன. அவற்றின் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    எனவே அவர்கள் டெம்போவை களியக்காவிளை போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு பார்சல்களை திறந்து பார்த்த போது, அதில் வெடிபொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    சல்பர், நைட்ரேட் பவுடர், கருமருந்து திரிகள், அலுமினியம் பவுடர் போன்றவை கட்டுகட்டாக இருந்தது. இவை பயங்கர வெடிபொருட்கள் ஆகும்.

    மொத்தம் 850 கிலோ அளவிற்கு இருந்த வெடி பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் களியக்காவிளை போலீஸ் நிலையத்திற்கு விரைந்துசென்று விசாரணை நடத்தினார்கள்.

    டெம்போவை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் கிளீனரிடம் போலீசார் விசாரித்தபோது, அவர்கள் சிவகாசியில் இருந்து வெடிபொருட்களை கேரள மாநிலம் நெடுமங்காட்டில் உள்ள ஒருவருக்கு கொண்டு செல்வதாகவும், அங்கு கோவில் விழாவிற்கு பட்டாசு தயாரிக்கவே இதை எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்தனர்.

    இது உண்மைதானா? என்பது பற்றி களியக்காவிளை போலீசார் கேரளா மற்றும் சிவகாசி போலீசாரை தொடர்பு கொண்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதற்கிடையே பிடிபட்ட டெம்போ மற்றும் அதில் இருந்த வெடிபொருட் கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×