என் மலர்
செய்திகள்

கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகையினை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்: விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு
பெரம்பலூர் சர்க்கரை ஆலை நிர்வாகத்திடமிருந்து கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகையினை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் நந்தகுமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுக்களை கலெக்டரிடம் நேரடியாக பொதுமக்கள் அளித்தனர். இம்மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு கலெக்டர் உத்தரவிட்டார்.
பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் மற்றும் தன்னார்வலர்கள் திரண்டு வந்து கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அதில், புதுடெல்லி பல்கலைக்கழக அறிவியல் நிபுணர்கள் மரபணு மாற்றப்பட்ட கடுகினை உற்பத்தி செய்துள்ளனர். ஆனால் இந்த மரபணு மாற்றப்பட்ட கடுகானது இயற்கை வழிவேளாண்மையை அதிக அளவில் பாதிக்கும். எனவே இந்திய விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும், பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைவிக்கும் வகையில் உள்ள இந்த மரபணு மாற்றிய கடுகினை பயிரிட அனுமதிக்ககூடாது என பிரதமருக்கும், தமிழக முதல்-அமைச்சருக்கும் மாவட்ட நிர்வாகம் கடிதம் எழுதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இதே போல் பெரம்பலூர் அருகே பிலிமிசை கிராம பொதுமக்கள் கொடுத்த மனுவில், பிலிமிசை கிராமம் அருகே செல்லும் மருதை ஆற்றின் ஓரமாக உள்ள வயல்காடுகளுக்கு சென்றுவரும் பாதையை சிலர் ஆக்கிரமித்துள்ளனர். இதனால் டிராக்டர், மாட்டுவண்டிகள் வயல்காடுகளுக்கு செல்ல முடியவில்லை. எனவே இந்த ஆக்கிரமிப்பினை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
பாடாலூர் அருகே திருவளக்குறிச்சியை சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தின் அருகே கல்குவாரிகளில் அதிக சத்தத்துடன் வெடி வைத்து பாறைகளை வெட்டி எடுக்கின்றனர். மேலும் இங்கு அதிக ஆழத்தில் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. ஆகவே பெருமாள் மலை, ராஜாமலை அடிவார பகுதிகளில் இயங்கும் கல்குவாரிகளுக்கு ஏலம் விடுவதை தடைசெய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.
தமிழக விவசாயிகள் சங்க பெரம்பலூர் மாவட்ட தலைவர் மாணிக்கம் தலைமையில் செய்யதுகாசிம், செல்ல கருப்பு, சுந்தரராசு உள்ளிட்ட நிர்வாகிகள் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கும், சர்க்கரை ஆலை மூலமாக வெளி ஆலைக்கும் கரும்பு வெட்டி அனுப்பிய வகையில் இதுவரை ரூ.47 கோடி நிலுவைத்தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.
இதனை தமிழக நிதித்துறை செயலாளரிடம் தொடர்பு கொண்டு விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிலுவை தொகை வழங்கப்படாவிட்டால் அனைத்து கரும்பு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கரும்பு விவசாயிகளின் வீடுகளில் தீபாவளி அன்று கரும்பு கொடி ஏற்றி போராட்டம் நடத்துவோம் என்று கூறியிருந்தனர். பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்ற கலெக்டர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்(பொறுப்பு) துரை, தனித்துணை கலெக்டர் புஷ்பவதி, மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story