search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    தள்ளுமுள்ளுவில் சட்டை கிழிந்த காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் வேனில் ஏற்றிய காட்சி.
    X
    தள்ளுமுள்ளுவில் சட்டை கிழிந்த காங்கிரஸ் நிர்வாகியை போலீசார் வேனில் ஏற்றிய காட்சி.

    நாகர்கோவிலில் ரெயில் மறியல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கைது

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து கோட்டார் ரெயில் நிலையத்தில் தடையை மீறி நுழைய முயன்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
    நாகர்கோவில்:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுப்பு தெரிவித்த மத்திய அரசை கண்டித்து குமரி மாவட்ட காங்கிரசார் இன்று கோட்டார் ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.

    இதற்காக கம்பளம் பஜார் பகுதியில் காலை முதலே ஏராளமான காங்கிரசார் திரண்டனர். மூத்த தலைவர் குமரி அனந்தன் தலைமையில் குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் கண்ணாட்டு விளை பாலையா, அசோகன் சாலமன், கிள்ளியூர் தொகுதி எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார், வக்கீல் ராதாகிருஷ்ணன், நகர தலைவர் மாகின் உள்பட பலர் திரண்டு நின்றனர்.

    இவர்கள் கம்பளம் பஜாரில் இருந்து கோட்டார் ரெயில் நிலையம் நோக்கி பேரணியாக சென்றனர். ரெயில் நிலையம் முன்பு போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து தொண்டர்களை தடுத்தனர். பேரணியில் வந்த தொண்டர்கள் தடுப்புகளை அகற்றி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனர்.

    இதனால் போலீசாருக்கும், காங்கிரஸ் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வாக்குவாதமும் மூண்டது. இதில் தொண்டர்கள் சிலரின் சட்டை கிழிந்து படுகாயம் ஏற்பட்டது.

    ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றார். அவரை போலீசார் சுற்றி வளைத்து தடுத்து நிறுத்தினர். மறியலுக்கு முயன்ற 30 பெண்கள் உள்பட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அப்போது அங்கு வந்த பிரின்ஸ் எம்.எல்.ஏ. போலீசாரின் வாகனத்தை மறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். மேலும் போலீசாரின் தடுப்பு அரணை மீறி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றார். அவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    கைதான காங்கிரசார் அனைவரும் போலீஸ் வாகனங்களில் ஏற்றப்பட்டு அருகில் உள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    அங்கு காங்கிரசார் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலுக்கு முயன்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜேஷ்குமாரை போலீஸ் அதிகாரி ஒருவர் தாக்கியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டம் நடந்தது.

    காங்கிரசாரின் தள்ளு முள்ளுவால் டி.எஸ்.பி. ரத்தினவேல் பாண்டியன், ஏட்டு பாபு ஆகியோர் காயம் அடைந்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    Next Story
    ×