search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பொன்னேரி பகுதியில் 20 கிராமங்களில் மீண்டும் மர்மகாய்ச்சல் பரவுகிறது
    X

    பொன்னேரி பகுதியில் 20 கிராமங்களில் மீண்டும் மர்மகாய்ச்சல் பரவுகிறது

    20 கிராமங்களில் மீண்டும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    பொன்னேரி:

    திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக மர்மகாய்ச்சல் பாதிப்பு உள்ளது. குறிப்பாக பொன்னேரி, திருத்தணி பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தது. மாவட்டம் முழுவதும் மர்மகாய்ச்சலுக்கு இது வரை 11 பேர் பலியாகி உள்ளனர்.

    சுகாதாரத்துறையினர் கிராமங்கள் முழுவதும் மருத்துவமுகாம் மற்றும் நடமாடும் மருத்துவமனைகள் அமைத்து சிகிச்சை அளித்தனர். போலி டாக்டர்களை பிடிக்கவும் வேட்டை நடத்தப்பட்டது. இதில் 31 போலி டாக்டர்களும் பிடிபட்டனர். இதைத் தொடர்ந்து மர்ம காய்ச்சல் கட்டுக்குள் வந்தது.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மீண்டும் மர்மகாய்ச்சல் பரவி உள்ளது. பொன்னேரியை அடுத்த சோமஞ்சேரி, பெரிமாங்கோடு, நந்தியம்பாக்கம், சின்னக்காவனம், மனேபுரம், உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமானோர் மர்ம காய்சலால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்களில் 50-க்கும் மேற்பட்டோர் பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 7 பேர் குழந்தைகள் அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதற்கிடையே திருவேங்கடபுரத்தை சேர்ந்த தசரதன் நகரை சேர்ந்த ஜான்சி என்பவருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பதை டாக்டர்கள் உறுதிப்படுத்தினர். அவருக்கு சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிசிச்சை அளிக்கப்படுகிறது.

    இதற்கிடையே திருவேங்கடபுரம் பகுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், மருத்துவ அலுவலர் ராஜேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் சுகாதாரப்பணிகளை முடுக்கி விட்டு உள்ளனர்.

    இது குறித்து பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்கள் கூறும் போது, கடந்த சில நாட்களாக ஏராளமானோருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தது. இதையடுத்து ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறோம். இங்கு போதிய இட வசதி இல்லை.

    காய்ச்சலை கட்டுப்படுத்த அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மேலும் பலர் இதனால் பாதிக்கும் அபாயம் உள்ளது என்றனர்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மீண்டும் மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். கிராமங்களில் வீடு தோறும் நில வேம்பு கசாயம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×