search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈரோட்டில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த அனைத்து கட்சியினர் ஊர்வலமாக திரண்டு சென்ற காட்சி.
    X
    ஈரோட்டில் ரெயில் மறியல் போராட்டம் நடத்த அனைத்து கட்சியினர் ஊர்வலமாக திரண்டு சென்ற காட்சி.

    ஈரோட்டில் இன்று ரெயில் மறியல்: முன்னாள் மத்திய மந்திரி உள்பட 1000 பேர் கைது

    காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஈரோட்டில் ரெயில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் மத்திய மந்திரி உள்பட 1000 பேரை போலீசார் கைது செய்தனர்.
    ஈரோடு:

    காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க வலியுறுத்தி இன்றும் நாளையும் தொடர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமிழக விவசாயிகள் சங்கங்களின் கூட்டியக்கத்தின் சார்பில் முடிவு செய்யப்பட்டது.

    இந்த ரெயில் மறியல் போராட்டத்திற்கு தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தே.மு.தி.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்ததோடு ரெயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.

    இதன் படி அந்தந்த கட்சி தலைவர்கள் தலைமையில் இன்று ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு கட்சி தலைவர்கள், முன்னணி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர்.

    இதே போல் ஈரோட்டிலும் ரெயில் மறியல் போராட்டம் இன்று நடந்தது.

    ஈரோட்டில் அனைத்து கட்சியினரின் ரெயில் மறியல் போராட்டத்தையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் உத்தரவின் படி காலை 6 மணிக்கெல்லாம் ஈரோடு ரெயில் நிலையம் முன் நூற்றுக்கணக்கான போலீசார் குவிந்தனர்.

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் நேரில் வந்து பாதுகாப்பு பணி குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    மறியல் நடத்த அனைத்து கட்சியினரும் ஈரோடு காளை மாட்டு சிலை அருகே குவிந்தனர்.

    தி.மு.க. சார்பில் மாநில துணை பொதுச்செயலாளரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையிலும், காங்கிரஸ் சார்பில் மாநகர் மாவட்ட தலைவர் ரவி தலைமையிலும், ம.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.பி. கணேசமூர்த்தி தலைமையிலும் திரண்டனர்.

    இதே போல் த.மா.கா. சார்பில் மாநில இளைஞர் அணி தலைவர் யுவராஜா தலைமையிலும், விடுதலை சிறுத்தைகள் சார்பில் மண்டல அமைப்பு செயலாளர் விநாயகமூர்த்தி தலைமையிலும், மார்க். கம்யூ சார்பில் மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமையிலும், இந்திய கம்யூ சார்பில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஸ்டாலின் குணசேகரன் தலைமையிலும் அந்தந்த கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் குவிந்தனர்.

    பிறகு இவர்கள் ரெயிலை மறிக்க ரெயில் நிலையத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டனர்.

    ‘‘அமைத்திடு, அமைத்திடு, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடு’’ ‘‘வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே விவசாயிகளை வஞ்சிக்காதே’’ ‘‘கண்டிக்கிறோம், கண்டிக்கிறோம், மத்திய அரசை கண்டிக்கிறோம்’’ போன்ற கோ‌ஷங்கள் எழுப்பியப்படி சென்றனர்.

    ரெயில் நிலைய நுழைவு வாயிலை அடைந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போலீசார் அவர்களை தடுத்தி நிறுத்தினர். மீறி உள்ளே நுழைய முயன்றவர்களை தடுத்து போலீசார் கைது செய்து வேன்களில் ஏற்றினர்.

    முன்னாள் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், முன்னாள் எம்.பி. கணேச மூர்த்தி உள்பட ஆயிரகணக்கான பேரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×