search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருச்சி அருகே மாடுகளுடன் வந்து தண்டவாளத்தில் குடில் அமைத்து விவசாயிகள் நூதன போராட்டம்
    X

    திருச்சி அருகே மாடுகளுடன் வந்து தண்டவாளத்தில் குடில் அமைத்து விவசாயிகள் நூதன போராட்டம்

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து திருச்சி அருகே மாடுகளுடன் வந்து தண்டவாளத்தில் குடில் அமைத்து விவசாயிகள் நூதன போராட்டம் நடத்தினர்.
    திருச்சி:

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் 48 மணி நேர ரெயில் மறியல் போராட்டத்தை விவசாயிகள் சங்க கூட்டமைப்பு அறிவித்து நடத்தி வருகிறது.

    தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், த.மா.கா., கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட 10 கட்சிகளின் அதரவுடன் நடைபெற்று வரும் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கைதாகி வருகிறார்கள்.

    போராட்டத்தின் ஒரு பகுதியாக திருச்சி அருகே விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் இன்று காலை திரண்டு வந்தனர்.

    அவர்கள் திருச்சி-கரூர் ரெயில் பாதையில் குடமுருட்டி பாலம் அருகே ஒன்று கூடினர். பின்னர் அவர்கள் தண்டவாளத்தில் குடில் அமைத்தனர். தொடர்ந்து விவசாயிகள் தாங்கள் அழைத்து வந்த மாடுகளுடன் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

    மேலும் காய்ந்து போன நெற்பயிர்களை கைகளில் ஏந்தி மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர். தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த போலீசார் விவசாயிகளை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.

    இதற்கிடையே அந்த வழியாக திருச்சி நோக்கி சரக்கு ரெயில் அதிவேகமாக வந்தது. விவசாயிகளின் போராட்டத்தை கண்ட ரெயில் சற்று தூரத்திலேயே திடீர் பிரேக் போட்டு நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து போலீசார் விவசாயிகளை கைது செய்தனர். மேலும் அவர்கள் அமைத்திருந்த குடில்களையும் அகற்றினர்.

    முன்னதாக அய்யாக்கண்ணு கூறுகையில், இந்த 48 மணி நேர போராட்டத்தில் விவசாயிகளாகிய நாங்கள் முழுமையாக ஈடுபடுவோம். விவசாயத்தை காப்பாற்ற இதைத்தவிர எங்களுக்கு வேறு வழி எதுவும் தெரியவில்லை. உடனடியாக மோடி தலைமையிலான மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும். இல்லையென்றால் நாங்கள் அனைவரும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை என்றார்.
    Next Story
    ×