என் மலர்

  செய்திகள்

  குழந்தைகள் இறப்புக்கு வைரஸ் காய்ச்சலே காரணம்: எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரி இயக்குனர் விளக்கம்
  X

  குழந்தைகள் இறப்புக்கு வைரஸ் காய்ச்சலே காரணம்: எழும்பூர் குழந்தைகள் ஆஸ்பத்திரி இயக்குனர் விளக்கம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எழும்பூர் ஆஸ்பத்திரியில் உயிரிழந்த குழந்தைகள் சாவுக்கு வைரஸ் காய்ச்சல் தான் காரணம் என்றும், டெங்கு காய்ச்சல் பீதி அடையவேண்டாம் என்றும் ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் சாமிநாதன் விளக்கம் அளித்து உள்ளார்.
  சென்னை:

  சென்னையை அடுத்த பல்லாவரம் அருகேயுள்ள லட்சுமிபுரம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் முகமது இதிரிஸ். இவருக்கு சவுதாபேகம் என்ற மனைவியும், பகானா (வயது 10), பாகிமா (8) என்ற மகள்களும், முகமது (4) என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் குழந்தைகள் பாகிமா மற்றும் முகமது ஆகியோர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

  இதேபோல மதுரவாயல் கார்த்திக்கேயன் நகர் அரங்கணல் தெருவை சேர்ந்த ஆரோக்கியசாமி என்பவரது மகள் லட்சிதா (6) என்ற குழந்தையும் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 14-ந்தேதி இரவு அடுத்தடுத்து குழந்தைகள் பாகிமா, முகமது, லட்சிதா ஆகியோர் உயிரிழந்தனர்.

  மர்ம காய்ச்சல் காரணமாக குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் சுகாதார பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளன. இதற்கிடையில் டெங்கு காய்ச்சல் காரணமாக குழந்தைகள் இறந்துவிட்டதாக தகவல் பரவியது. இதனை தமிழக அரசு சுகாதாரத்துறை மற்றும் ஆஸ்பத்திரி டாக்டர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

  வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது என்றும், எந்த வகை வைரஸ் காய்ச்சல் என்பது ரத்த பரிசோதனையில் தெரியவரும் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து சென்னை எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரி இயக்குனர் டாக்டர் டி.சாமிநாதன் நிருபரிடம் கூறியதாவது:-

  காய்ச்சல் பாதிப்புக்கு ஆளான 3 குழந்தைகளும் எழும்பூர் ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு முன்பே, 4 அல்லது 5 நாட்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதையடுத்து கடந்த 13-ந்தேதி, அந்த 3 குழந்தைகளும் இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அனுமதியின்போதே மிகவும் சோர்வோடு இருந்த அக்குழந்தைகளின் நாடித்துடிப்பு குறைவான அளவிலேயே இருந்தது. குறிப்பாக லட்சிதாவின் மூக்கில் இருந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது.

  இதையடுத்து 3 பேரின் ரத்த மாதிரிகளும் சேகரிக்கப்பட்டு, 24 மணி நேர டாக்டர்கள் கண்காணிப்பில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை தரப்பட்டது. காய்ச்சல் வீரியத்தை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை சீராக்கும் வகையிலும் சர்க்கரை-உப்பு கலவை ஒரு மணிக்கு 10 மி.லி. என்ற அளவில் குழந்தைகளுக்கு தரப்பட்டது. குழந்தையின் சிறுநீர் அளவு மற்றும் காய்ச்சலின் தன்மை ஆகியவற்றை பொறுத்து கொடுக்கப்படும் சர்க்கரை-உப்பு கலவையின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டது. எடைக்கு தக்கவாறு ரத்தமும் ஏற்றப்பட்டது.

  இந்தநிலையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த குழந்தைகள் 14-ந்தேதி இரவு கடுமையான வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்து உள்ளனர். குழந்தைகள் சாவுக்கு வைரஸ் காய்ச்சல் தான் காரணமாகும். ஆனால் இதனை டெங்கு காய்ச்சல் என்று சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். இதில் எந்தவித உண்மையும் இல்லை.

  பல வகை வைரஸ் காய்ச்சல்கள் குழந்தைகளை தாக்குகின்றன. வைரஸ், டைபாய்டு, சிறுநீர் தொற்று காரணமாகவும் காய்ச்சல் குழந்தைகளை தாக்க வாய்ப்பு உள்ளது. கண்வலி, இருமல், தலைவலி உள்ளிட்ட பிரச்சினைகளாலும் காய்ச்சல் வர வாய்ப்புண்டு. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோதே குழந்தைகளின் உடலில் இருந்து ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு விட்டது. இந்த ரத்த மாதிரியை கிண்டியில் உள்ள நோய் தடுப்பு மற்றும் மருந்து ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பி உள்ளோம். இந்த ரத்த பரிசோதனை அறிக்கை இன்னும் சில நாட்களில் வந்துவிடும். அப்போது தான் குழந்தைகளை தாக்கிய வைரஸ் எது? என்பது தெரியவரும். தவிர குழந்தைகளின் ரத்த மாதிரியை எங்கள் ஆஸ்பத்திரி மைக்ரோ-பயாலஜி துறை பேராசிரியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

  உயிரிழந்த குழந்தைகள் உடலில் 5 நாட்களுக்கும் மேலாக வைரஸ் தங்கி உள்ளது. அந்த வைரஸ் தாக்கத்தினால் தான் குழந்தைகள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே வைரஸ் காய்ச்சல் காரணமாகத்தான் உயிரிழப்பு நேர்ந்திருக்கிறது என்பது தான் உண்மை. எனவே காய்ச்சல் அறிகுறி தெரிந்துவிட்டால், உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகி தகுந்த சிகிச்சை பெறவேண்டும். அப்படி வந்தால் எந்த வகை வைரஸ் காய்ச்சல் என்றாலும் காப்பாற்றிவிடலாம். தற்போது காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளான 16 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து குழந்தைகளும் நல்ல உடல் நிலையில் உள்ளனர்.

  அதேவேளையில் செஞ்சியை சேர்ந்த கீர்த்தனா (12) என்ற சிறுமி கடந்த 15 நாட்களாக ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்தார். அவர் பிறவியிலேயே இதயநோய் மற்றும் மூச்சுக்குழாய் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த கீர்த்தனாவையும் மர்ம காய்ச்சலில் சிக்கி பலியானார் என்று வதந்தி பரப்பப்பட்டு விட்டது.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×