search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
    X

    தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

    தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள புதிய மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
    சென்னை:

    தென்மேற்கு பருவமழை தெலுங்கானா முழுவதும் ஓய்ந்து, கேரளாவில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இதற்கிடையில் கேரளா மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் 2 நாட்களுக்கு முன்பு உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து இருக்கிறது.

    இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிதாக உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

    கேரளா மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியின் வளிமண்டலத்தில் உருவான மேலடுக்கு சுழற்சி நீட்டிக்கும் அதே வேளையில், தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் புதிதாக மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது.

    இதனால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை முடிவடைய உள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மதிப்பீட்டின்படி, திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அதிகபட்சமாக 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. அடுத்தபடியாக விருதுநகர் மாவட்டம் கோவிலங்குளத்தில் 3 செ.மீ. மழை பெய்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை, விருதுநகரில் 2 செ.மீ. மழை பெய்துள்ளது.
    Next Story
    ×