என் மலர்
செய்திகள்

கன்னியாகுமரி அருகே கடற்கரையில் நள்ளிரவில் ஆளில்லா விமானம் பறந்ததாக பரபரப்பு
நாகர்கோவில்:
கன்னியாகுமரி அருகே உள்ள சொத்தவிளை கடற்கரை பரந்து விரிந்த நீண்ட மணல் பரப்பை கொண்டது. இதனால் குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாதலங்களில் இதுவும் ஒன்றாக கருதப்படுகிறது. தினந்தோறும் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கடலின் அழகை ரசித்து விட்டு செல்கிறார்கள்.
நேற்று இரவு 11 மணி அளவில் இங்கு ஆளில்லா விமானம் ஒன்று பறந்து படம் பிடித்ததை அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் பார்த்துள்ளனர். கடற்கரையையொட்டி மிகவும் தாழ்வாக பறந்ததை அவர்கள் பார்த்துள்ளனர்,, இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுபற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கும், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனால் சொத்தவிளை எல்லைக்குட்பட்ட சுசீந்திரம் போலீசாரும், அந்த பகுதியில் சுற்றி வந்த ரோந்து போலீசாரும் உஷார்படுத்தப்பட்டனர். உடனடியாக அவர்கள் சொத்தவிளை கடற்கரைக்கு விரைந்து சென்றனர். பள்ளம் கடற்கரை கிராமம் முதல் மணக்குடி வரை உள்ள கடற்பகுதி முழுவதும் போலீசார் சல்லடை போட்டு தேடுதல் வேட்டை நடத்தினர். ஆனால் ஆளில்லா விமானம் எதுவும் பறக்கவில்லை.
அதேசமயம் விமானம் பறந்ததாக அங்குள்ளவர்கள் உறுதியாக தெரிவித்தனர். குளச்சலில் இருந்து கடற்கரை பகுதியை படம் பிடித்தவாறே அந்த விமானம் சென்றதாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதனால் போலீசார் தொடர்ந்து அந்த பகுதியில் கண்காணித்து வருகிறார்கள். 10-க்கும் மேற்பட்ட போலீசார் சொத்தவிளை கடற்கரையில் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.