என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய நிபுணர் குழுவினருடன் தலைமை செயலாளர் ஆலோசனை
    X

    மத்திய நிபுணர் குழுவினருடன் தலைமை செயலாளர் ஆலோசனை

    மேட்டூர் அணை டெல்டா பகுதிகளை பார்வையிட்ட மத்திய நிபுணர் குழுவினருடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தினார். மத்திய நிபுணர் குழுவினரின் அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் 17-ந்தேதி தாக்கல் செய்யப்படுகிறது.
    ஆலந்தூர்:

    தமிழக-கர்நாடகாவில் உள்ள அணைகளில் நீர் இருப்புகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க மத்திய நீர்வள ஆணைய தலைவர் ஜி.எஸ்.ஜா தலைமையில் 13 பேர் கொண்ட உயர்நிலை தொழில்நுட்ப குழுவை சுப்ரீம் கோர்ட்டு அமைத்தது.

    இந்த குழுவினர் கடந்த 2 நாட்களாக கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள், காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகள் பாசன பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    மேட்டூர் அணையை ஞாயிறு அன்று பார்வையிட்ட ஜா குழு அணையின் வலது கரையையும் அணையின் நீர் இருப்பு நிலவரத்தையும் ஆய்வு செய்தது. வருவாய் துறை, மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தனர். அப்போது அங்கு வந்த விவசாயிகள் ஜா குழுவினரை சந்தித்து தங்கள் நிலைமைகளை எடுத்து கூறினார்கள். அவர்களின் கருத்துக்களை தொழில் நுட்ப குழுவினர் கவனமாக கேட்டறிந்தனர்.

    அதன் பிறகு திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா பகுதிகளுக்கு சென்று பாசன பகுதிகளை பார்வையிட்டனர். அங்கும் விவசாயிகள் தங்கள் கஷ்டங்களை எடுத்து கூறினார்கள்.

    2 நாள் ஆய்வுகளை முடித்துக்கொண்டு ஜா குழுவினர் நேற்றிரவு சென்னை வந்தனர்.

    சென்னை விமான நிலையம் அருகே உள்ள ராடிசன் ஓட்டலில் தங்கிருந்த மத்திய குழுவினரை தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவ் இன்று காலை 9.30 மணியளவில் சந்தித்து பேசினார்.

    அப்போது தமிழகத்திற்கான நீர் தேவை குறித்து ஜி.எஸ்.ஜாவிடம் தலைமை செயலாளர் ராமமோகன ராவ் விரிவாக எடுத்துரைத்தார்.

    அதன்பிறகு ஜா தலைமையிலான குழுவினர் டெல்லி புறப்பட்டுச் சென்றனர்.

    முன்னதாக சென்னை விமான நிலையத்தில் ஜி.எஸ்.ஜா நிருபர்களிடம் கூறியதாவது:-

    உச்சநீதிமன்ற உத்தரவுபடி கர்நாடகா-தமிழக அணைகளில் நீர் இருப்பை பார்வையிட்டோம். கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி பாசனப்பகுதிகள், நீர்பிடிப்பு பகுதிகளில் ஆய்வு செய்தோம். அதன்பிறகு மேட்டூர் அணையின் நீர் இருப்பு நிலவரத்தையும் ஆய்வு செய்தோம்.

    காவிரி டெல்டா பாசன பகுதிகளை 2 நாட்களாக முழுமையாக ஆய்வு செய்தோம். சேலம், ஈரோடு, திருச்சி, தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்ட கலெக்டர்களிடமும், பொதுப் பணித்துறை அதிகாரிகளிடமும், விவசாயிகளிடமும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

    தமிழக விவசாயிகள் கொடுத்துள்ள தகவல், விவரங்கள் அனைத்தும் மொழியாக்கம் செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசின் தலைமை செயலாளர் இன்று என்னை சந்தித்து பேசினார். மாநில அரசு கொடுத்துள்ள கோரிக்கைகள் குறித்தும் விவசாயிகள் தந்துள்ள மனுக்கள் குறித்தும் ஆலோசித்தோம். விவசாயிகளின் கோரிக்கைகளையும் பரிசீலித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    எங்களது அறிக்கையை வருகிற 17-ந்தேதிக்குள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×