search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெட்டப்பட்டு சிதறிக்கிடந்த ரூபாய் நோட்டுகள்.
    X
    வெட்டப்பட்டு சிதறிக்கிடந்த ரூபாய் நோட்டுகள்.

    பண்ருட்டி அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்டு ரோட்டில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள்

    பண்ருட்டி அருகே துண்டு துண்டாக வெட்டப்பட்டு ரோட்டில் வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள் சேலத்தில் இருந்து சென்னைக்கு கொண்டுவரப்பட்ட ரெயிலில் கொள்ளையடிக்கப்பட்ட பணமா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பண்ருட்டி:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கோ.குச்சிப்பாளையம் கிராமம் உள்ளது. இங்கு ரோட்டின் ஓரத்தில் உள்ள ஆலமரத்தின் கீழ் நேற்று இரவு 10 மணியளவில் கட்டுகட்டாக ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்தன.

    இதைப்பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த ரூபாய் நோட்டுகளில் 100 ரூபாய், 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் அதிகமாக இருந்தன. அவை துண்டுதுண்டாக வெட்டப்பட்டிருந்தன.

    இதுகுறித்து பண்ருட்டி போலீசில் புகார் செய்தனர். துணை போலீஸ் சூப்பிரண்டு முரளிதரன், இன்ஸ்பெக்டர்கள் கங்காதரன், ராமநாதன், ஆகியோர் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அந்த ரூபாய் நோட்டுகளை கைப்பற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

    ரூபாய் நோட்டுகள் பயன்படுத்தமுடியாத அளவிற்கு துண்டுதுண்டாக வெட்டப்பட்டிருந்தன. அந்த ரூபாய் நோட்டுகளை யார் வீசிவிட்டு சென்றார்கள் என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரித்து வருகின்றனர்.

    சேலத்தில் இருந்து சென்னைக்கு கடந்த ஆகஸ்டு 9-ந்தேதி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேற்கூரையில் துளையிட்டு வங்கி பணம் ரூ.6 கோடியை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

    கொள்ளை குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினர். அதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து சென்னை, சேலம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் சி.பி.சி.ஐ.டி போலீசார் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    2 மாதங்கள் ஆகியும் இந்த கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் யார்? என்று எந்த தகவலும் கிடைக்கவில்லை. சி.பி.சி.ஐ. டி ஐ.ஜி.மகேஷ் குமார் அகர்வால் தலைமையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளையர்கள் சேலம் விருத்தாசலம் இடையே ரெயிலில் ரூ.6 கோடியை கொள்ளையடித்து சென்றிருக்கலாம் என்று அவர்கள் கருதினர். இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் மர்ம நபர்கள் யாரும் நடமாடுகிறார்களா? என்று கண்காணித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பண்ருட்டி அருகே ரூபாய் நோட்டுகள் வெட்டப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தகவல் அறிந்து கடலூர் மாவட்ட சி.பி.சி.ஐ.டி. போலீஸ் அதிகாரிகள் மற்றும் ரெயில்வே போலீஸ் அதிகாரிகள் பண்ருட்டி விரைந்தனர். துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட பணம் சேலம், சென்னை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொள்ளையர்கள் கொள்ளையடித்த பணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இது கள்ள நோட்டா? போலீசாரின் விசாரணைக்கு பயந்து கொள்ளையர்கள் வீசி விட்டு சென்ற பணமா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. கைப்பற்றப்பட்ட பணம் பல கோடி ரூபாய் மதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

    இந்த ரூபாய் நோட்டுகள் பெங்களூருக்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்த இடத்துக்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது அந்த இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    மேலும் தடயவியல் நிபுணர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த பகுதியில் கிடந்த தடயங்களை சேகரித்தனர்.

    ரூபாய் நோட்டுகள் சிதறிக்கிடந்த கோ.குச்சிப்பாளையம் கிராமத்தை போலீசார் முற்றுகையிட்டுள்ளனர். வீடு வீடாக சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக யாரும் தங்கியுள்ளார்களா? என்று கேட்டறிந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் உள்ளவர்களிடம் அதிரடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×