என் மலர்tooltip icon

    செய்திகள்

    காஞ்சீபுரம் அருகே ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை முயற்சி: போலீசாரை கண்டதும் மர்ம நபர்கள் ஓட்டம்
    X

    காஞ்சீபுரம் அருகே ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை முயற்சி: போலீசாரை கண்டதும் மர்ம நபர்கள் ஓட்டம்

    காஞ்சீபுரம் அருகே ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    காஞ்சீபுரம்:

    காஞ்சீபுரத்தை அடுத்த வையாவூர் மீனாட்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயசீலன். ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி பீகார் மாநிலத்தில் நர்சாக பணியாற்றி வருகிறார்.

    அவர் பணியில் இருந்து ஓய்வு பெறுவதையடுத்து சொந்த ஊருக்கு அழைத்து வர ஜெயசீலன் வீட்டை பூட்டிவிட்டு கடந்த திங்கட்கிழமை பீகாருக்கு சென்றார்.

    இந்த நிலையில் நேற்று இரவு மர்ம கும்பல் ஜெயசீலன் வீட்டு பின்பக்க கதவை உடைத்து புகுந்தனர். அங்கிருந்த டி.வி. மற்றும் லேப்டாப் ஆகியவற்றை எடுத்து கொண்டு பீரோவை உடைக்க முயன்றனர்.

    அந்த நேரத்தில் போலீசார் அப்பகுதியில் வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீஸ் வாகனத்தின் சைரன் ஒலியை கேட்ட கொள்ளை கும்பல் டி.வி.யை மட்டும் எடுத்து கொண்டு பின்பக்கம் வழியாக நைசாக தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    போலீசார் ஜெயசீலன் வீட்டில் சோதனை செய்த போது டி.வி. மட்டும் திருட்டு போய் இருந்தது. பீரோவில் இருந்த 50 பவுன் நகைகள் அப்படியே இருந்தது. ரோந்து போலீசாரை கண்டதும் கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்ததால் நகைகள் தப்பியது. கொள்ளை கும்பலை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×