என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுக்கோட்டை அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 4 பேர் பலி
    X

    புதுக்கோட்டை அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 4 பேர் பலி

    புதுக்கோட்டை அருகே மரத்தில் மோட்டார் சைக்கிள் மோதி 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே வாழக் குடியிருப்பு கிராமத்தை சேர்ந்தவர் அடைக்கலம். இவரது மகன் சந்துரு (வயது 26). இவரது நண்பர்கள் அறந்தாங்கி கோட்டைப் பகுதியை சேர்ந்த சிவராஜ் (27), இந்திராநகர் சண்முகபாண்டியன் (25) கல்லூர் கிராமம் பிரபு (21). இவர்கள் 4 பேரும் காரைக்குடியில் பெயிண்டிங் வேலைக்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    வேலையை முடித்து விட்டு மீண்டும் அறந்தாங்கி திரும்பினர். குடிக்காடு அருகே வந்து கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலை ஓரத்தில் உள்ள மரத்தின் மீது மோதியது. இதில் 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் செல்லும் வழியிலேயே சந்துரு மற்றும் சிவராஜ் பரிதாபமாக உயிரிழந்தனர். சண்முக பாண்டியன், பிரபு இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மற்றொரு சம்பவம்...

    இதே போல் புதுக்கோட்டை மாப்பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவ நாதன். இவரது மகன்கள் சேகர் (24), சக்திவேல் (21), கட்டிடத் தொழிலாளர்கள். இவர்கள் வேலைக்காக கீரமங்கலம் அருகே உள்ள மேற்பனைக்காடு பகுதிக்கு சென்றனர். பின்னர் வேலையை முடித்து இருவரும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

    புதுக்கோட்டை அருகே உள்ள மணியம் பள்ளம் பகுதி அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள மரத்தில் மோதியது. இதில் 2 பேரும் பலத்த காயம் அடைந்தனர். சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சக்திவேலை அக்கம் பக்கத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.

    இந்த சம்பவம் குறித்து கணேஷ்நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×