என் மலர்
செய்திகள்

நெல்லை அருகே அரசு பள்ளி பூட்டை உடைத்து லேப்-டாப் பொருட்கள் திருட்டு
நெல்லை அருகே அரசு பள்ளி பூட்டை உடைத்து லேப்-டாப் மற்றும் பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர்.
நெல்லை:
நெல்லையை அடுத்த மானூர் அருகே உள்ள பள்ளமடையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி தலைமை ஆசிரியையாக மணிமேகலை உள்ளார். இங்கு ஏராளமான மானவ, மாணவிகள் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று பள்ளி முடிந்து அனைவரும் சென்று விட்டனர்.
இரவு யாரோ மர்ம நபர்கள் அங்கு வந்தனர். பின்னர் பள்ளியின் அலுவலக பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். அங்குள்ள பீரோ சாவியை எடுத்து அதில் இருந்த லேப் டாப் மற்றும் பொருட்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
மறுநாள் பள்ளிக்கு வந்த ஆசிரியர்கள் பள்ளியில் பூட்டு உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தலைமை ஆசிரியை மணிமேகலை மானூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பள்ளியில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
Next Story






