என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் விவகாரம்: 3-வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரை
    X

    ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும் விவகாரம்: 3-வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரை

    ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது தனியார் ஆஸ்பத்திரி டாக்டரை இடம் பெறச்செய்வது தொடர்பான வழக்கில் நீதிபதிகளிடையே மாறுபட்ட கருத்து ஏற்பட்டதால், இந்த வழக்கை 3-வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரை செய்து டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    சென்னை:

    சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார், கடந்த 18-ந் தேதி சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரது உடல் ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

    ராம்குமார் சாவில் மர்மம் உள்ளதாகவும், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர்கள் குழுவில் தங்கள் தரப்பு டாக்டர் ஒருவரை நியமிக்கவேண்டும் என்றும் ராம்குமாரின் தந்தை பரமசிவம், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், பிரேத பரிசோதனை செய்யும் குழுவில் இடம்பெற்றுள்ள 3 டாக்டர்களுடன், 4-வதாக டாக்டர் பாலசுப்பிரமணியன் என்பவரை நியமித்து நேற்று உத்தரவு பிறப்பித்தார்.


    இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பரமசிவம் நேற்று மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில், மனுதாரர் தரப்பு வக்கீல் நேற்று காலையில் கோரிக்கை முன்வைத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கை பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக உத்தரவிட்டார்கள்.

    இதன்படி, இந்த வழக்கை நேற்று நீதிபதிகள் விசாரித்தார்கள். அப்போது நடந்த வாதம் பின்வருமாறு:-

    மனுதாரர் வக்கீல்:- ராம்குமாரை திட்டமிட்டு கொலை செய்திருப்பதாக நாங்கள் உறுதியாக நம்புகிறோம். சாவில் மர்மம் உள்ளதால், அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது, எங்கள் தரப்பில் ஒரு டாக்டரை அதில் இடம் பெறச்செய்யவேண்டும்.

    நீதிபதிகள்:- எந்த டாக்டரை நியமிக்கச் சொல்கிறீர்கள்?

    வக்கீல்:- டாக்டர் சம்பத்குமார் என்பவரை நியமிக்கவேண்டும்.

    நீதிபதி வைத்தியநாதன்:- ராம்குமார் உடலை பிரேத பரிசோதனை செய்ய 4 டாக்டர்கள் நியமிக்கப்பட்டிருக்கும்போது, 5-வது தனியார் ஆஸ்பத்திரி டாக்டரை நியமிக்கவேண்டும் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும்? ஒருவேளை தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் ஒருவரை நியமித்தால், ஒவ்வொருவரும் இதுபோன்ற கோரிக்கையுடன் வழக்கு தொடரமாட்டார்களா?

    வக்கீல்:- சிறையில் அடைக்கப்பட்டுள்ள நபர் மர்மமான முறையில் இறந்துள்ளார். பொதுவாக அரசு டாக்டர்கள் பிரேத பரிசோதனை அறிக்கையை காவல்துறைக்கு ஆதரவாக வழங்குவதாக தேசிய மனித உரிமை ஆணையமே கூறியுள்ளது. அதனால், பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் ஒரு டாக்டரை நியமிக்கவேண்டும்.

    கூடுதல் அட்வகேட் ஜெனரல்:- சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதற்காக இறந்து போனவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய தனியார் டாக்டரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கக்கூடாது. இந்த கோரிக்கையை ஏற்றால், ஒவ்வொரு வழக்கிலும் பிரேத பரிசோதனை செய்ய தனியார் டாக்டரை நியமிக்கவேண்டும் என்று பலர் வழக்கு தொடருவார்கள்.

    நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ்:- யார் வருவார்கள்? தெருவிலோ, வீட்டிலோ ஒருவரை வெட்டிக் கொலை செய்திருந்தால், அதற்காக இந்த கோரிக்கையுடன் வழக்கு தொடரமாட்டார்கள். ராம்குமார் இறந்தது சிறையில். அதாவது சிறை அதிகாரி கட்டுப்பாட்டின் கீழ் அவர் இருந்தபோது மர்மமான முறையில் இறந்துள்ளார். அதனால், சாவில் மர்மம் உள்ளது என்றும், பிரேத பரிசோதனை செய்யும் அரசு டாக்டர்களுடன் தங்களது தரப்பில் ஒரு டாக்டரை நியமிக்கவேண்டும் என்றும் மனுதாரர் கேட்கிறார்.

    நீதிபதி வைத்தியநாதன்:- தனியார் ஆஸ்பத்திரி டாக்டரை நியமிப்பதற்கு பதில் மேலும் ஒரு அரசு டாக்டரை நியமிக்கலாமே?

    மனுதாரர் வக்கீல்:- அரசு மீது நம்பிக்கை இல்லாததால்தான், தனியார் டாக்டரை கேட்கிறோம்.

    இவ்வாறு வாதம் நடந்தது.

    இதை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி இருதரப்பு வக்கீல்களும் வாதம் செய்தனர். அப்போது, இரு நீதிபதிகளும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தனர்.

    இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யும்போது, தங்களது விருப்பத்தின்படி ஒரு டாக்டரை நியமிக்கவேண்டும் என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இதற்கு அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், ஒரு வழக்கில், போலீஸ் காவலில் அல்லது என்கவுண்டரில் சாகும் ஒரு நபரை பிரேத பரிசோதனை செய்யும்போது, பாதிக்கப்பட்டோர் சார்பில் ஒரு தடயவியல் நிபுணரை நியமிக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

    தற்போதுள்ள வழக்கில், ராம்குமார் சிறைத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும்போது இறந்துள்ளார். எனவே, அவரது உடலை பரிசோதனை செய்யும்போது, சுதந்திரமான ஒரு நிபுணரை அதில் இடம் பெறச் செய்யவேண்டும். அதுதான் நேர்மையாகவும், நியாயமாகவும் இருக்கும்.

    இதனால், ஒரு சுதந்திரமான தடயவியல் நிபுணரை நியமிக்க வேண்டும் என்று நான் (நீதிபதி ஹூலுவாடி ஜி.ரமேஷ்) முடிவு செய்தேன். ஆனால், சகோதர நீதிபதி எஸ்.வைத்தியநாதன், இந்த முடிவில் இருந்து மாறுபடுகிறார்.

    அவர் கூடுதல் அட்வகேட் ஜெனரலின் வாதத்தை ஏற்கிறார். தனியார் ஆஸ்பத்திரியில் பணியாற்றும் ஒரு டாக்டரை நியமிப்பதற்கு பதில், அரசு ஆஸ்பத்திரியில் பணியாற்றும் மேலும் ஒரு டாக்டரை நியமிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார்.

    இந்த வழக்கில் இரு நீதிபதிகளுக்கும் மாறுபட்ட கருத்து ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை 3-வது நீதிபதியின் விசாரணைக்கு பரிந்துரை செய்கிறோம். எனவே, இந்த வழக்கை தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கும்படி ஐகோர்ட்டு பதிவுத்துறைக்கு உத்தரவிடுகிறோம்.

    3-வது நீதிபதி விசாரித்து இறுதி தீர்ப்பை பிறப்பிக்கும் வரை, ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யக்கூடாது என்றும் உத்தரவிடுகிறோம்.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
    Next Story
    ×