என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே கோவில் கலசம் திருட்டு: மந்திரவாதி கைது
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம், மருதூர் வடக்கு அன்னப்பன்காடு பகுதியில் முனீஸ்வரர், ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் விமானத்தில் 3 கலசங்கள் வைக்கப்பட்டிருந்தது. இதில் ஒரு கலசம் மட்டும் திருட்டு போய்விட்டது. இந்த திருட்டு தொடர்பாக போலீசில் புகார் கொடுப்பது பற்றி கோவிலை நிர்வாகம் செய்து வரும் நாராயணசாமி, முக்கியஸ்தர்கள், பஞ்சாயத்தார்கள் ஆலோசித்து வந்தனர்.
இந்த நிலையில் மருதூர் வடக்கு ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், நாராயணசாமியிடம் திருட்டு போன கலசம் பற்றி மந்திரவாதி விஜயகுமாரை விசாரித்தால் உண்மை தெரியும் என்று கூறினாராம். இதையடுத்து அவர் கரியாப்பட்டினம் போலீசில் இது பற்றி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது கோவில் அருகே உள்ள மந்திரவாதி விஜயகுமார் (33) என்பவர் வீட்டிற்கு சென்று சோதனையிட்டபோது கோவிலில் திருடப்பட்ட கலசம் தனித்தனியே பிரித்து மறைத்து வைத்திருந்ததை கைப்பற்றி விஜயகுமாரையும் கைது செய்தனர்.






