என் மலர்
செய்திகள்

திண்டிவனம் அருகே லாரி டிரைவரை தாக்கி கொள்ளை
விழுப்புரம்:
திருச்சியை சேர்ந்தவர் சம்பத் (வயது 44), மினிலாரி டிரைவர். இவரது உதவியாளர் ராஜவேல் (27). இவர்கள் 2 பேரும் சென்னையில் இருந்து திருச்சிக்கு மினி லாரியில் பிளாஸ்டிக் பொருட்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டனர். நள்ளிரவு 1 மணிக்கு அவர்கள் திண்டிவனம் அருகே ஒலக்கூர் பகுதிக்கு வந்தனர். அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் மினிலாரியை நிறுத்தினர்.
பின்னர் அந்த மினி லாரியில் சம்பத் படுத்து தூங்கினார்.அவரது உதவியாளர் ராஜவேல் அந்த பகுதியில் உள்ள புளியமரத்தின் கீழ் படுத்து தூங்கினார்.
இந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் 5 வாலிபர்கள் அங்கு வந்தனர். மினி லாரியில் படுத்து தூங்கிய டிரைவர் சம்பத்தை தட்டி எழுப்பினர். அவர் பையில் இருந்த பணத்தை தரும்படி கேட்டனர். அவர் கொடுக்க மறுத்தார்.
இதனால் கோபம் அடைந்த வாலிபர்கள் திடீரென்று சம்பத்தின் முகத்தில் ஓங்கி கையால் குத்தினர். இதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் அவர் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் ரொக்க பணத்தை அந்த வாலிபர்கள் பறித்து கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.
தாக்குதலில் காயம் அடைந்த சம்பத் முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுகுறித்து ஒலக்கூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.