என் மலர்
செய்திகள்

நெல்லையில் சுத்தமான குடிநீர் கேட்டு காலிகுடங்களுடன் பெண்கள் மறியல்
நெல்லை:
நெல்லை தச்சநல்லூர் மங்களாகுடியிருப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக குடிநீர் சாக்கடை கலந்து மோசமாக வந்தது. இதுபற்றி அப்பகுதி பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
அதற்கு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் காலிகுடங்களுடன் மதுரை ரோட்டில் திரண்டனர். அவர்கள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்த வழியே சிறிதுநேரம் போக்குவரத்து பாதித்தது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தச்சநல்லூர் போலீசார், மாநகராட்சி தச்சை மண்டல அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
முன்னாள் எம்.எல்.ஏ மாலைராஜாவும் வந்து பொதுமக்களிடம் பேச்சு நடத்தினார். பொதுமக்கள் தரப்பில் கலங்கலான குடிநீர் பாட்டிலில் அடைத்து வந்து அதிகாரிகளிடம் காண்பிக்கப்பட்டது.
இதை பார்த்த அதிகாரிகள் சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். அதன்பிறகு போக்குவரத்து சீரானது.