search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட்டை 26-ந்தேதி விண்ணில் செலுத்த திட்டம்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்
    X

    பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட்டை 26-ந்தேதி விண்ணில் செலுத்த திட்டம்: இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

    8 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட்டை வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினர்.
    சென்னை:

    8 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட்டை வருகிற 26-ந் தேதி (திங்கட்கிழமை) விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறினர்.

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பி.எஸ்.எல்.வி. ஜி.எஸ்.எல்.வி. ஆகிய இருவகை ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது.

    கடல் சார் ஆராய்ச்சி, தகவல் தொடர்பு, வானிலை பயன்பாட்டுக்காக பல்வேறு செயற்கை கோள்களை இஸ்ரோ வடிவமைத்து வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி வருகிறது.

    அந்தவகையில் வானிலை முன்னறிவிப்பு, சூறாவளியை கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு சேவைகள், காற்றின் திசையை அறிவதற்காக 360 கிலோ எடை கொண்ட ஸ்கேட்-சாட்-1 என்ற செயற்கைகோளை வடிவமைத்து உள்ளது. இதனை பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்த திட்டமிட்டு உள்ளது.

    இந்த செயற்கைகோள் பூமியில் இருந்து 720 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்படுகிறது. இதன் ஆயுள்காலம் 5 ஆண்டுகள் ஆகும்.

    இந்த செயற்கை கோளுடன் பி1-சாட், பிரதாம், பாத்பைண்டர்-1, அல்சாட்-1 பி, அல்சாட்-2 பி, அல்சாட்-1 என், கேன்எக்ஸ்-7 ஆகிய மேலும் 7 செயற்கை கோள்கள் விண்ணில் செலுத்தப்படுகின்றன. இதில் ஒரு சில செயற்கைகோள்கள் அல்ஜீரியா நாட்டைச் சேர்ந்தவையாகும்.

    பி.எஸ்.எல்.வி. சி-35 ராக்கெட் மூலம் இந்த செயற்கைகோள்களை வருகிற 26-ந் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது. ராக்கெட், பிரதானமான செயற்கைகோளை திட்டமிட்ட சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்திய பிறகு, ராக்கெட்டின் என்ஜின் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, பின்னர் மீண்டும் இயங்கி மற்றொரு சுற்றுவட்டப்பாதையில் செயற்கைகோளை நிலை நிறுத்தும் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பணிகளில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

    மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×