search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நத்தம் விசுவநாதனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை: கைதானதாக தகவல் வெளியானதால் பரபரப்பு
    X

    நத்தம் விசுவநாதனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை: கைதானதாக தகவல் வெளியானதால் பரபரப்பு

    சென்னையில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் அவர் கைதானதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    சென்னை:

    தமிழக சட்டசபை தேர்தலின் போது கரூர் மாவட்டத்தில் அன்புநாதன் என்பவருடைய வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அவருடைய வீட்டில் இருந்து ரூ.5 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. முக்கிய ஆவணங்களும் சிக்கியது. விசாரணையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனின் பினாமியாக அவர் இருந்ததாக தகவல் வெளியானது. மேலும் நத்தம் விசுவநாதன் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்தது.

    அதன் அடிப்படையில் நத்தம் விசுவநாதனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை மற்றும் திண்டுக்கல்லில் உள்ள அவருடைய வீடு, கல்லூரிகள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் கடந்த 13, 14 ஆகிய தேதிகளில் சோதனை நடத்தினர்.
    சோதனை நடைபெற்றுக்கொண்டிருந்த போதே, அ.தி.மு.க.வில் நத்தம் விசுவநாதன் வகித்து வந்த அமைப்பு செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பு குழு உறுப்பினர் பொறுப்புகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

    விசாரணையின் முடிவில் அன்புநாதன் வீட்டில் கைப்பற்ற பணம் நத்தம் விசுவநாதனுக்கு சொந்தமானது என்று தகவல் வெளியானது. இதுகுறித்து அமலாக்கத்துறையினரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல் அளித்தனர்.

    இதையடுத்து சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நத்தம் விசுவநாதனுக்கு அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். அதன்படி நத்தம் விசுவநாதன் விசாரணைக்கு ஆஜரானார். அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார்.

    விசாரணையின் முடிவில் நத்தம் விசுவநாதன் கைது செய்யப்பட்டதாக நேற்று மாலை தகவல் வெளியானது. தொலைக்காட்சிகளிலும்
    நத்தம் விசுவநாதன் கைது என்று செய்திகள் ஒளிபரப்பாயின. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்தநிலையில், 'தான் கைது செய்யப்படவில்லை என்றும், அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு சரியான முறையில் விளக்கம் அளித்துள்ளேன் என்றும் நத்தம் விசுவநாதன் விளக்கம் அளித்தார்.
    Next Story
    ×