என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீர்காழியில் சூறாவளி காற்று: கடல் சீற்றத்தில் சிக்கி 20 படகுகள் சேதம்
    X

    சீர்காழியில் சூறாவளி காற்று: கடல் சீற்றத்தில் சிக்கி 20 படகுகள் சேதம்

    சீர்காழி பகுதியில் நேற்று சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கீழமூவர்க் கரை மற்றும் அதன் சுற்று வட்டார மீனவ கிராம பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டது. சூறாவளிக்காற்றில் சிக்கி 20 படகுகள் சேதமடைந்தன. மேலும் 3 மீனவர்கள் படுகாயமடைந்தனர்.

    திருவெண்காடு:

    சீர்காழி பகுதியில் நேற்று சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் கீழமூவர்க் கரை மற்றும் அதன் சுற்று வட்டார மீனவ கிராம பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டது. சூறாவளிக்காற்றில் சிக்கி 20 படகுகள் சேதமடைந்தன. மேலும் 3 மீனவர்கள் படுகாயமடைந்தனர்.

    நாகை மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்தநிலையில் நேற்று மாலை 5.45 மணி அளவில் சீர்காழி, பூம்புகார், திருவெண்காடு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. மேலும் கீழமூவர்க்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார கடற்பகுதியில் ராட்சத அலைகள் எழும்பி கடல் சீற்றம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் மழை பெய்வதற்கு முன் சீர்காழி அருகே உள்ள கீழமூவர்க்கரை கிராமத்தை சேர்ந்த அஞ்சப்பன் மகன் ராமராஜ்(வயது27) (மீனவர்) என்பவர் தனது புதிய பைபர் படகை கீழமூவர்க்கரை கடற்கரையில் நிறுத்தி பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சூறாவளிக்காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ராமராஜின் புதிய படகு உள்பட அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20 பைபர் படகுகள் தூக்கி வீசப்பட்டு பலத்த சேதம் அடைந்தன.

    மேலும் கடற்கரையில் நின்று கொண்டிருந்த ராமராஜ் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் சின்னதம்பி மகன் குணசேகரன்(48), தர்மராஜ் மகன் பூவரசன்(19), ஆகியோர் படகுகளுக்கு இடையே சிக்கி படுகாயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த கிராம மக்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து திருவெண்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி விசாரணை நடத்தி வருகிறார். சீர்காழி, திருவெண்காடு, பூம்புகார் ஆகிய பகுதிகளில் நேற்று திடீரென பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தன. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 10 கூரை வீடுகம் சேதம் அடைந்தன.

    Next Story
    ×