search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முழுஅடைப்பு போராட்டம்: தி.மு.க-விடுதலை சிறுத்தைகள் ரெயில் மறியல் போராட்டம் - ஸ்டாலின், திருமாவளவன் கைது
    X

    முழுஅடைப்பு போராட்டம்: தி.மு.க-விடுதலை சிறுத்தைகள் ரெயில் மறியல் போராட்டம் - ஸ்டாலின், திருமாவளவன் கைது

    கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தி.மு.க-விடுதலை சிறுத்தைகள் சார்பில் ரெயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற மு.க.ஸ்டாலின், திருமாவளவன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
    சென்னை:

    கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாட்டில் இன்று விவசாய அமைப்புகள், வணிகர் சங்கங்கள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்து வருகிறது.

    இந்த போராட்டத்துக்கு தி.மு.க., தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரவு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டன.

    காவிரியில் தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி விவசாய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு முழுவதும் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். விவசாயிகள் திரளாக வந்து ரெயில்களை மறித்ததால் சேலம், விழுப்புரம், விருத்தாசலம், ஈரோடு, கோவை, புதுக்கோட்டை, மதுரை, தஞ்சாவூர் உள்பட பல பகுதிகளில் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்களும் ஏற்கனவே அறிவித்தபடி இன்று காலை ரெயில் மறியலில் ஈடுபட்டனர். கட்சிக் கொடியை ஏந்தி ரெயில்களை மறித்த அவர்கள் மத்திய அரசையும், கர்நாடக அரசையும் எதிர்த்து கோ‌ஷமிட்டனர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி ரெயில் போக்குவரத்தை சீர்படுத்தினார்கள்.

    முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த தி.மு.க., இன்று காலை தமிழ்நாடு முழுவதும் ஊர்வலமாக சென்று சாலை மறியல், ரெயில் மறியல்களில் ஈடுபட்டனர்.

    தி.மு.க. சார்பில் ரெயில் மறியல் போராட்டத்துக்கு எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. என்றாலும் இன்று காலை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஊரிலும் நூற்றுக்கணக்கான தி.மு.க.வினர் திரண்டு, ஊர்வலமாக சென்று மறியல் போராட்டம் செய்தனர்.

    சென்னை எழும்பூரில் எதிர்க்கட்சித் தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொடி ஏந்தி ஊர்வலமாக சென்றனர். மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் அருகில் இருந்து மு.க. ஸ்டாலின் நடந்து வந்தார்.

    அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ரங்கநாதன், சேகர்பாபு, கே.எஸ்.ரவிச்சந்திரன், தாயகம் ரவி ஆகியோர் நடந்து வந்தனர். தி.மு.க. பகுதி செயலாளர்கள் ஐ.சி.எப். முரளி, தேவஜவகர், ஜோசப்சாமுவேல், ராஜ கோபால், ஜெயந்த, வாசு, சதீஷ்குமார், தேவன், நாகராஜன், தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜா, வக்கீல் கிரிராஜன், மூக்கையா, அம்பத்தூர் ஆஸ்டின் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

    எழும்பூர் ரெயில் நிலைய நுழைவாயில் அருகே வந்த போது மு.க.ஸ்டாலினையும், தி.மு.க.வினரையும் போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். போராட்டக்காரர்கள் ரெயில் நிலையத்துக்குள் நுழைந்து விடக் கூடாது என்பதற்காக போலீசார் நேற்றிரவு முதலே தடுப்புகள் ஏற்படுத்தி வலுவான பாதுகாப்பு அரணை அமைத்திருந்தனர்.

    எனவே மு.க.ஸ்டாலினும், தி.மு.க. தொண்டர்களும் எழும்பூர் ரெயில் நிலைய போர்டிகோவில் நின்று முற்றுகைப் போராட்டம் நடத்தினார்கள். கர்நாடக அரசுக்கு எதிராகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் அவர்கள் கோ‌ஷமிட்டனர்.

    “கர்நாடகா அரசே ஏன் இந்த வெறி பித்து”, “கர்நாடகா அரசே, காவிரி நீரை தடுக்காதே”, “அடிக்காதே அடிக்காதே விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே”, “காவிரி நதி நீர் மக்களின் பொது சொத்து” என்று தி.மு.க.வினர் கோ‌ஷமிட்டனர்.

    சுமார் 15 நிமிடம் மு.க.ஸ்டாலினும், தி.மு.க. தொண்டர்களும் மத்திய அரசை கண்டித்து கோ‌ஷமிட்டனர். பிறகு அவர்கள் ரெயில் நிலையத்துக்குள் சென்று ரெயில்களை மறித்து போராட்டம் நடத்த முயற்சி செய்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள்.

    இதனால் மு.க.ஸ்டாலினும், தி.மு.க. நிர்வாகிகளும் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்கள்.

    இதனால் மு.க.ஸ்டாலினையும், தி.மு.க.வினரையும் கைது செய்வதாக போலீசார் அறிவித்தனர். மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டு போலீஸ் வேனில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டனர். அவர்களைத் தொடர்ந்து தி.மு.க. தொண்டர்களை பஸ்களில் ஏற்றி போலீசார் அழைத்து சென்றனர்.

    குரோம்பேட்டையில் நகரச் செயலாளர் இ.கருணாநிதி தலைமையில் தி.மு.க.வினர் ரெயில் மறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.

    அவருடன் பாக்கியராஜ், ராஜாராம், இளங்கோவன், கன்னியப்பன், ரமேஷ், ரங்கநாத், ஜோசப் அண்ணாதுரை, சூரைராஜ், சிவக்குமார் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கைதானார்கள்.

    பல்லாவரத்தில் மாவட்டச் செயலாளர் தா.மோ. அன்பரசன் தலைமையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திரண்டு ரெயில் மறியலில் ஈடுபட்டனர். தாம்பரம்- கடற்கரை ரெயில், செங்கல்பட்டு செல்லும் ரெயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் நேரம் போக்குவரத்து தடைபட்டது.

    போலீசார் விரைந்து சென்று தா.மோ.அன்பரசனையும், அவருடன் வந்தவர்களையும் கைது செய்தனர். இதில் கலைவாணி காமராஜ், ஒன்றிய செயலாளர் படப்பை மனோகரன், பம்மல் கருணாநிதி, ரமேஷ் கண்ணா, கண்டோன்மென்ட் பாபு, ராஜமாணிக்கம், திருநீர்மலை ஜெயக்குமார், ஜெபருல்லா, நெப்போலியன், மகளிரணி வனஜா உள்பட 3 ஆயிரம் பேர் கைதானார்கள்.



    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமையில் பேசின்பாலம் ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் ரெயில் நிலையத்திற்குள் புகுந்தனர். அவர்களை போலீசார் தடுத்து மறித்தனர்.

    இதனால் விடுதலை சிறுத்தைகளுக்கும், போலீசாருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீசாரால் அவர்களை தடுக்க முடியவில்லை. போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி திருமாவளவன் ரெயில் நிலையத்திற்குள் தொண்டர்களுடன் புகுந்து சென்றார்.

    அப்போது சென்ட்ரலில் இருந்து டெல்லி செல்லும் நவஜீவன் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அதனை மறித்து திருமாவளவன் ஆர்ப்பாட்டம் செய்தார். ரெயில் என்ஜின் பகுதியில் ஏறி நின்று மத்திய அரசை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினார்.

    பின்னர் போலீசார் திருமாவளவனை கைது செய்தனர். அவருடன் நிர்வாகிகள் வன்னியஅரசு, சேகுவாரே, மாவட்ட செயலாளர்கள் இரா.செல்வம், வி.கே.ஆதவன், செல்லத்துரை, அம்பேத்வளவன், ரவிசங்கர், அன்புசெழியன் மற்றும் தேவராஜன், எழில்கரோலின் கவுதம்சன்னா, அறிவமுதன் உள்ளிட்ட 1000 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் வேனில் ஏற்றப்பட்டு திருமண மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    ஆவடி ரெயில் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தொகுதி செயலாளர் ஆதவன் தலைமையில், மண்டல பொறுப்பாளர் கவுதம் கோபு, திருவூர் சங்கர் உள்பட 40 பேர் ரெயில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    பொன்னேரி ரெயில் நிலையத்தில் ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற ஒன்றிய அமைப்பாளர் சிவராஜ், ஒன்றிய செயலாளர் சேகர், பொருளாளர் வடிவேல் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

    கொருக்குப்பேட்டை ரெயில் நிலையத்தில் தி.மு.க. வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனன் தலைமையில் கே.பி.பி. சாமி எம்.எல்.ஏ., சிம்லா முத்துச் சோழன், ஆர்.டி.சேகர், மருது கணேஷ், ஏ.டி.மணி உள்பட 600-க்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்ட்ரல் நோக்கி சென்ற மின்சார ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×