search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் ரெயில் மறியல் போராட்டம்: வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 300 பேர் கைது
    X

    சேலத்தில் ரெயில் மறியல் போராட்டம்: வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 300 பேர் கைது

    சேலத்தில் ரெயில் மறியல் போராட்டம் நடத்திய வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. உள்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

    சேலம்:

    தி.மு.க.சார்பில் சேலம் மத்திய மாவட்ட செயலாளர் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில், 300-க்கும் மேற்பட்டோர் இன்று காலை 11 மணி அளவில் ரெயில் மறியல் செய்ய சேலம் ஜங்சன் ரெயில் நிலைய நுழைவு வாயில் முன்பு திரண்டனர்.

    அப்போது போலீசார் ரெயில் நிலையம் முன்பு இரும்பு தடுப்பு வேலிகளை பாதுகாப்பு அரணாக அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த இரும்பு தடுப்பு வேலிகளை தி.மு.க.வினர் தாண்டி ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயற்சி செய்தனர். ஆனால், அவர்களை போலீசார் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர்.

    இதனால் போலீசாருக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு தள்ளு- முள்ளு உருவானது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.

    இதையடுத்து, அதே இடத்தில் நின்று மத்திய மற்றும் மாநில அரசை கண்டித்து காப்பாற்று, காப்பாற்று தமிழக விவசாயிகளை காப்பாற்று. பாதுகாப்பு கொடு, பாதுகாப்பு கொடு கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கு பாதுகாப்பு கொடு என்பன போன்ற கோ‌ஷங்களை எழுப்பினார்கள். இதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்தனர்.

    பின்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரெயில் மறியலுக்கு முயன்றனர். அவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×