என் மலர்tooltip icon

    செய்திகள்

    புஷ்பலதா
    X
    புஷ்பலதா

    விருத்தாசலத்தில் ஒருதலைகாதலுக்கு நர்சு பலி: வாலிபர் அவமானப்படுத்தியதால் தற்கொலை

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒருதலை காதல் சம்பவத்தில் வாலிபர் அவமானப்படுத்தியதால் மனவேதனை அடைந்த நர்சு புஷ்பலதா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் ஒருதலை காதலுக்கு மேலும் ஒரு பெண் பலியாகி உள்ளார்.

    விருத்தாசலம் பூதாமூர் ஏனாதிமேட்டை சேர்ந்தவர் செல்லமுத்து. கூலித் தொழிலாளி. இவரது மகள் புஷ்பலதா (வயது 21).

    விருத்தாசலத்தில் தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக வேலைப்பார்த்து வந்தார். தினமும் வீட்டில் இருந்து சைக்கிளில் வேலைக்கு சென்று வந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த தனசேகர் (22) என்ற வாலிபர் புஷ்பலதாவை ஒருதலையாக காதலித்தார். புஷ்பலதா வேலைக்கு செல்லும்போது தினமும் அவரை பின் தொடர்ந்து சென்றார். தனது காதலை அவரிடம் வெளிப்படுத்தினார். ஆனால், புஷ்பலதா காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.

    ஆனாலும் தனசேகர் தொடர்ந்து தன்னை காதலிக்கும்படி வற்புறுத்தி வந்தார்.

    கடந்த 31-ந்தேதி பணி முடிந்து புஷ்பலதா சைக்கிளில் வந்து கொண்டி ருந்தார். பூதாமூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே வந்த போது தனசேகர் திடீரென்று அவரை வழிமறித்தார். தன்னை காதலிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். புஷ்பலதா அதை ஏற்கவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த தனசேகர், புஷ்பலதாவை திட்டினார். என்னை காதலிக்காத நீ உயிரோடு இருக்கக்கூடாது என்று கூறி சுடிதாரை பிடித்து இழுத்து அவரது கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றார்.

    அவரிடம் இருந்து தப்பிய புஷ்பலதா அங்கிருந்து கண்ணீரோடு வீட்டிற்கு சென்றார். வீட்டின் பின்பக்கம் உள்ள மரத்தில் துப்பட்டாவால் தூக்குப் போட்டு கொண்டார்.

    உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    நேற்று இரவு சிகிச்சை பலனளிக்காமல் புஷ்பலதா பரிதாபமாக இறந்தார். 9 நாட்களுக்கு பின் அவரது உயிர் பிரிந்தது.

    விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனசேகரை கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ஒருதலைக் காதலில் கடந்த ஜூன் மாதம் சென்னையில் சுவாதி கொலை செய்யப்பட்டார். பின்னர் விழுப்புரத்தில் நவீனா, கரூரில் சோனாலி, தூத்துக்குடியில் பிரான்சினா ஆகியோரும் ஒருதலைக் காதலில் உயிர் இழந்தனர்.

    இந்த நிலையில் விருத்தாசலத்தை சேர்ந்த நர்சு புஷ்பலதாவும் உயிர் இழந்துள்ளார். இதன்மூலம் ஒருதலைக் காதலுக்கு கடந்த 4 மாதத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
    Next Story
    ×