என் மலர்
செய்திகள்

ராமாபுரம் ஆடிட்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீசில் சிக்கிய கைதி தப்பி ஓட்டம்
சென்னை:
சென்னை ராமாபுரம் அன்னை சத்யா நகரில் வசித்து வருபவர் சீனிவாசன். ஆடிட்டரான இவர் மனைவி ரம்யா, தாய் நாகம்மாள் (70) ஆகியோருடன் வசித்து வருகிறார். கே.கே.நகர் அம்மன் கோவில் தெருவில் நாகம்மாள் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார்.
இவரிடம் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (40) என்பவர் மாமூல் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. ஆனால் பணம் கொடுக்க மறுத்த நாகம்மாள் இதுபற்றி தனது மகன் சீனிவாசனிடம் கூறினார்.
இதன் பேரில் கோவிந்தராஜ் மீது கே.கே.நகர் போலீசில் புகார் செய்யப்பட் டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு, சீனிவாசனின் வீட்டுக்கு சென்று ரவுடிக் கும்பல் கொலை மிரட்டல் விடுத்துள்ளது. அப்போது சீனிவாசன் வீட்டில் இல்லை. அவரது மனைவியும், 2 குழந்தைகளும் மட்டுமே இருந்துள்ளனர்.
இதன் பின்னர் அங்கிருந்து சென்ற அக்கும்பல் நள்ளிரவில் மீண்டும் வந்து சீனிவாசனின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியது. அது டமார் என்ற சத்தத்துடன் வெடித்து சிதறியது. கார் நிறுத்தும் பகுதியில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் வீட்டில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சீனிவாசனின் வீடு இருக்கும் பகுதி ராயலாநகர் போலீஸ் எல்லைக்குட்பட்டதாகும். இதையடுத்து ராயலா நகர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
போலீஸ் விசாரணையில் மாமூல் கொடுக்காத ஆத்திரத்தில் கோவிந்தராஜ், சீனிவாசனின் வீட்டில் பெட்ரோல் குண்டை வீசியது தெரிய வந்தது. போலீசார் அவரை தேடிக்கண்டு பிடித்து கைது செய்தனர்.
பின்னர் விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் இன்று அதிகாலையில் அங்கிருந்து கோவிந்தராஜ் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மாமூல் கேட்டு மிரட்டிய கோவிந்தராஜ் முக்கிய அரசியல் கட்சி ஒன்றை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.