search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோதனை அடிப்படையில் அம்மா வாரச்சந்தை முதல்கட்டமாக 3 இடங்களில் தொடங்கப்படும்
    X

    சோதனை அடிப்படையில் அம்மா வாரச்சந்தை முதல்கட்டமாக 3 இடங்களில் தொடங்கப்படும்

    சோதனை அடிப்படையில் அம்மா வாரச்சந்தை முதல்கட்டமாக 3 இடங்களில் தொடங்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
    சென்னை:

    சோதனை அடிப்படையில் அம்மா வாரச்சந்தை முதல்கட்டமாக 3 இடங்களில் தொடங்கப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    பெருநகர சென்னை மாநகராட்சியில் அம்மா மாளிகையில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமியின் தலைமையில், கமிஷனர் தா.கார்த்திகேயன் முன்னிலையில், 45 வங்கிகளின் பிரதிநிதிகள், 25 சேவைத்துறைகளின் பிரதிநிதிகள், 27 ஏற்றுமதியாளர்களின் பிரதிநிதிகள் என மொத்தம் 97 பிரதிநிதிகளுடன் அம்மா வாரச்சந்தை அமைப்பதற்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

    அம்மா வாரச்சந்தை முதல்கட்டமாக சென்னையின் மூன்று வட்டாரங்களிலும் தலா ஒரு இடம் வீதம் 3 இடங்களில் சோதனை அடிப்படையில் தொடங்கப்படும். அதாவது, வடக்கு வட்டாரத்தில் ஆர்.கே.நகர் தொகுதி, மத்திய வட்டாரத்தில் அசோக் நகர் 11-வது அவென்யூ, தெற்கு வட்டாரத்தில் பழைய மகாபலிபுரம் சாலை என முடிவு செய்யப்பட்டது.

    முதன்முறையாக தொடங்க இருப்பதால் பொருட்களை விற்பனைக்கு கொண்டுவரும் உற்பத்தியாளர்கள், நுகர்வோர்களுக்கு ஏற்படும் சாதக பாதகங்களை பரிசீலித்து அடுத்தகட்டமாக, அரும்பாக்கம், மிண்ட் பாலம் கீழே, வளசரவாக்கம், சேத்துப்பட்டு தார்க்கலவை நிலையம் மற்றும் மெரினா கடற்கரை ஆகிய இடங்களுக்கு விரிவுபடுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது. மேலும் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:-

    * அம்மா வாரச்சந்தை காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இருக்கலாம் எனவும், கொண்டுவரும் பொருட்கள் உடனே தீர்ந்துவிட்டால் மாற்று ஏற்பாடு என்ன செய்ய வேண்டும் எனவும், அதற்கு தீர்வாக சந்தை நேரம் நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

    * அம்மா வாரச்சந்தை காலை 6 மணி முதல் ஆரம்பிக்கப்படுவதால், பொருட்களை கொண்டு வருபவர்கள் முதல் நாள் மாலை 6 மணி முதல் கொண்டு வந்து தங்கள் சொந்த பொறுப்பிலேயே பாதுகாத்து கொள்ள வேண்டும்.

    * பொருட்கள் தரமானதாகவும், வெளிவிலையை விட குறைவாகவும் இருக்க வேண்டும்.

    * தரம், எடை மற்றும் விலையை உற்பத்தியாளரும், தயாரிப்பாளரும் முன்கூட்டியே மூடிய கடிதத்தில் என்னென்ன பொருட்கள், அதன் விலை, தொடர்பு அதிகாரி மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் போன்ற விவரங்களை பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு அனுப்ப வேண்டும்.

    * அம்மா வாரச்சந்தையில் கடைகள் அமைக்க கூடாரம், மின்விளக்கு, மின்விசிறி, குடிநீர்வசதி, கழிவறை சுத்தம், சுகாதாரம் போன்றவை இலவசமாக மாநகராட்சியே அமைத்து தரும்.

    * சைவ, அசைவ பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களுக்கு தனித்தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.

    * மாவட்ட கலெக்டர்கள் தங்கள் மாவட்டத்தில் உள்ள சேவைத்துறைகள், வங்கிகள், ஏற்றுமதியாளர்களின் கூட்டத்தையும், சேவைத்துறைகள் தங்கள் துறைகளின் மாவட்ட பிரதிநிதிகளின் கூட்டத்தையும் கூட்டி ஆலோசித்து பொருட்களை கொண்டு வரும் தயாரிப்பாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்க வேண்டும்.

    * சேவைத்துறைகள் தங்கள் துறைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகளை முதல் நாள் மாலை 6 மணிக்கு சம்பந்தப்பட்ட நிர்ணயம் செய்யும் பிரதிநிதியால் பெற்று, அவர்கள் துறை தொடர்பாக வரும் விற்பனையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் திரும்பி செல்லும் வரை அவர்களுக்கு தேவையான வசதிகளை ஒருங்கிணைப்பு செய்ய வேண்டும்.

    * சேவைத்துறைகள், வங்கிகள், ஏற்றுமதியாளர்கள், கலெக்டர்களை தொடர்பு கொள்ள வசதியாக மாநகராட்சி சார்பில் தனியாக ஒரு இணையதளம் தொடங்கி, அதில் எந்த பொருட்களை கொண்டுவர எந்த துறைகளை அணுக வேண்டும் என பொருள் ரீதியாகவும், எந்த துறையில் என்னென்ன பொருட்களை கொண்டு வர அணுகலாம் என்பது குறித்த விவரம், அம்மா வாரச்சந்தை தொடர்பான அண்மை விவரங்கள் பதிவு செய்யப்படும்.

    * அம்மா வாரச்சந்தையில் விற்போரும், நுகர்வோரும் பயன்பெறும் வண்ணம் மாநகராட்சியின் பொதுசுகாதாரத்துறை மூலம் அவசர உதவிக்கு ஏற்பாடு செய்யப்படும்.

    இக்கூட்டத்தில் துணை கமிஷனர் (பணிகள்) கே.எஸ்.கந்தசாமி, வடக்கு வட்டார துணை கமிஷனர் பிரவீண் பி.நாயர், மத்திய வட்டார துணை கமிஷனர் டாக்டர்.சுபோத்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×