search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: சின்னசேலம் அருகே பாலம் கட்டும் பகுதியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை
    X

    ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளை: சின்னசேலம் அருகே பாலம் கட்டும் பகுதியில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

    ரெயிலில் ரூ. 6 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் சின்னசேலம் அருகில் உள்ள முகாசா பரூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலம் பகுதிக்கு சென்று விசாரணை நடந்தினர்.
    சேலம்:

    சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கிக்கு சொந்தமான பணம் சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எடுத்து செல்லப்பட்டது.

    இந்த பணத்தில் ரூ.6கோடி கொள்ளைப்போனது. ரெயில் பெட்டியில் கொள்ளையர்கள் ஏறி மேற்கூரையில் துளையிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து சென்னை, சேலம், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் நேற்று சேலம் வந்து விசாரித்து சென்றார். சேலம் ஜங்சன் ரெயில் நிலையத்திற்கு பணத்தை பாதுகாப்பாக எடுத்து வந்த நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆயுதப்படை போலீசாரை அழைத்து விசாரணை நடந்தது.

    இந்த விசாரணை முடிந்து ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் சென்னை திரும்பினார்.

    சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரெண்டு நாகஜோதி, புலனாய்வு சிறப்பு அதிகாரி அமித்குமார் சிங் ஆகியோர் சேலத்தில் தங்கி இருந்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

    நேற்று இரவு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சின்ன சேலம் அருகில் உள்ள முகாசா பரூர் பகுதியில் கட்டப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலம் பகுதிக்கு சென்று விசாரித்தனர். இந்த விசாரணை விடிய விடிய நடந்தது. இந்த பாலம் கட்டும் பணியால் இந்த வழியே செல்லும் அனைத்து ரெயில்களும் 10கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல ரெயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் அனைத்து ரெயில்களும் இந்த பாலத்தில் செல்லும் போது மெதுவாக செல்லும்.

    இதை அறிந்த கொள்ளையர் யாரும் இந்த பாலம் பகுதியில் ரெயில் வரும் போது ரெயிலில் ஏறி கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாமோ என்ற கோணத்திலும் விசாரித்து உள்ளனர். இந்த பாலம் கட்டும் பகுதியில் வசிக்கும் சிலரிடமும் விசாரணை நடந்துள்ளது.

    இந்த பாலம் வழியே ரெயில் செல்லும் போது ரெயில் மேற்கூரையில் ஏற முடியுமா என்றும் போலீசார் பார்த்து உள்ளனர். தொடர்ந்து இந்த பகுதியில் போலீசார் விசாரித்தும் வருகிறார்கள்.

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இருந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான பணத்தை நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் வாடகை பேசி வேனில் பணத்தை ஏற்றிக்கொண்டு சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அனுப்பி வைத்துள்ளார். நேற்று இவரிடமும், வேன் டிரைவரிடமும் விசாரணை நடந்தது. இவர்கள் மூலம் பணம் ரெயிலில் கொண்டு செல்லும் விவரம் யாருக்கும் தெரிந்ததா? என்றும் விசாரணை நடக்கிறது.

    சேலத்தில் இருந்து சென்னைக்கு ரெயிலில் பணம் கொண்டு சென்ற போது பாதுகாப்பிற்கு சேலம் மாநகர ஆயுதப்படை உதவி கமி‌ஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர் கோபி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த். ஏட்டுக்கள் கோவிந்தன், சுப்பிரமணி, போலீஸ்காரர்கள் கணேசன், செந்தில்குமார், பெருமாள், ரமேஸ் சென்று இருந்தனர்.

    இவர்களிடம் சேலத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். சேலம் மாநகர துணை கமி‌ஷனர் செல்வராஜனும் விசாரித்தார். இந்த விசாரணை அறிக்கை சேலம் போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய் குமாரிடம் அளிக்கப்பட்டுள்ளது. அவரும் விசாரித்து வருகிறார்.

    இந்த நிலையில் உதவி கமி‌ஷனர் நாகராஜன் உள்பட 9 போலீசாரிடம் மீண்டும் விசாரிக்க வேண்டும். இதனால் 9 பேரும் சென்னைக்கு வருமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று உத்தரவிட்டனர். இதையடுத்து 9 பேரும் நேற்று இரவு சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

    பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்திருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள் 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் பிடித்து விசாரித்து வருவதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

    அதே நேரத்தில் வேலூரில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு தப்ப முயன்ற கொள்ளையர்கள் 4 பேரை துப்பாக்கி முனையில் போலீசார் பிடித்துச் சென்றதாக ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.

    ஆனால் இந்த தகவல்களை சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. மகேஷ்குமார் அகர்வால் மறுத்து உள்ளார். யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

    இதுதவிர சேலத்தில் தனியார் பார்சல் நிறுவனத்தில் பணியாற்றிய வட மாநிலத்தைச் சேர்ந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்து வருவதாகவும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 6 கொள்ளையர்கள் ரெயிலில் பணத்தை கொள்ளை அடித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    தனிப்படை போலீசார் ராஜஸ்தான் மற்றும் பீகாரில் முகாமிட்டு விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலையும் உறுதிப்படுத்த முடியவில்லை.

    இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் பொதுமக்களுக்கு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். வங்கிகள், பெட்ரோல் பங்க், வணிக வளாகங்கள், ஓட்டல்களில் கிழிந்த மற்றும் பழைய ரூபாய் நோட்டுகளை யாராவது மாற்ற முயன்றால் இதுகுறித்து சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. கட்டுப்பாட்டு அறைக்கு (போன் நம்பர்: 044-28513500 மற்றும் 044-28512510 என்ற எண்ணுக்கு) தகவல் கொடுக்கலாம் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×