search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆத்தூர் அருகே நிதி நிறுவனத்தில் 5.5 கிலோ நகை-பணம் கொள்ளை: முன்னாள் மேலாளர் கைது
    X

    ஆத்தூர் அருகே நிதி நிறுவனத்தில் 5.5 கிலோ நகை-பணம் கொள்ளை: முன்னாள் மேலாளர் கைது

    ஆத்தூர் அருகே நிதி நிறுவனத்தில் 5.5 கிலோ நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் முன்னாள் மேலாளர் கைது செய்யப்பட்டு நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன
    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த கெங்கவல்லியில் பிரபல தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளராக முருகேசன் உள்ளார். இந்த நிதி நிறுவனத்தில் அந்த பகுதியினர் ஏராளமானோர் நகைகளை அடகு வைத்து கடன் பெற்றுள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி காலை வழக்கம் போல நிதி நிறுவனத்தை திறக்க மேலாளர் முருகேசன் சென்றார். அப்போது லாக்கரில் இருந்த 5.5 கிலோ தங்க நகை மற்றும் ரூ.1 லட்சத்து 35 ஆயிரம் ரொக்கப்பணமும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

    இதையறிந்த கோவை சரக ஐ.ஜி.பாரி, சேலம் சரக டி.ஐ.ஜி. நாகராஜ், சேலம் மாவட்ட எஸ்.பி. ராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது கொள்ளையர்கள் நிதி நிறுவனத்தின் ஜன்னல் கம்பிகளை அறுத்து உள்ளே நுழைந்ததும், லாக்கரை சாவி போட்டு திறந்து கொள்ளையடித்து இருப்பதும், மோப்ப நாய் கண்டுபிடிக்காமல் இருக்க மிளகாய் பொடி தூவி சென்றதும் தெரிய வந்தது.

    இதற்கிடையே நகைகளை அடகு வைத்தவர்கள் நிதி நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

    கொள்ளையர்களை விரைந்து பிடிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், டி.எஸ்.பி.க்கள் சோமசுந்தரம், நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

    சாவியை போட்டு லாக்கர் திறக்கப்பட்டு கொள்ளை அடிக்கப்பட்டிருந்ததால் தனிப்படையினருக்கு அந்த நிதி நிறுவனத்தில் தற்போது பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் முன்னாள் ஊழியர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை பிடித்து தனித்தனியாக விசாரணை நடத்தினர்.

    அப்போது அந்த நிதி நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து தற்போது அருகில் உள்ள புத்திரகவுண்டம் பாளையம் கிளைக்கு கடந்த 5-ந் தேதி மாறுதலாகி சென்ற மருதமணி (வயது25) என்பவருக்கு இந்த கொள்ளையில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இவர் ஆத்தூர் அருகே உள்ள சொக்கநாதபுரத்தை சேர்ந்தவர் ஆவார்.

    அவரை பிடித்து போலீசார் ரகசிய இடத்தில் வைத்து கடந்த 2 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்ட மருதமணி இந்த கிளையில் மேலாளராக வேலை பார்த்த போதே கொள்ளையடிக்க திட்டம் போட்டு அதற்காக பெரிய திட்டத்தை தீட்டியுள்ளார்.

    அதன்படி முதல்கட்டமாக அந்த லாக்கரை திறப்பதற்காக போலி சாவியை தயாரித்தார். பின்னர் அந்த சாவியை போட்டு லாக்கரை திறந்து பார்த்த போது அது வெற்றிகரமாக முடிந்துள்ளது.

    பின்னர் சுதாரித்த அவர் தற்போது திட்டத்தை நிறைவேற்றினால் போலீசாரிடம் சிக்கி கொள்வோம் என்று நினைத்து அதற்காக சமயம் பார்த்து காத்திருந்தார்.

    இதற்கிடையே கடந்த 5-ந் தேதி அருகில் உள்ள கிளைக்கு மருதமணி மாற்றப்பட்டார். இது தான் தக்க சமயம் என்று கருதிய மருதமணி கடந்த 13-ந் தேதி திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்தார்.

    அதற்காக அன்று இரவு ஜன்னல் கம்பியை அறுத்து நிதிநிறுவனத்தின் உள்ளே நுழைந்த மருதமணி தான் தயாரித்து வைத்திருந்த போலி சாவியை போட்டு லாக்கரை லாவகமாக திறந்து நகையை கொள்ளையடித்தார்.

    பின்னர் தப்பி சென்ற அவர் அந்த நகையை ஆத்தூர் ஜோதிநகரில் உள்ள தனது வாடகை வீட்டில் பதுக்கி வைத்ததும் தெரிய வந்தது. இதையடுத்து மருதமணியை கைது செய்த போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும் இந்த கொள்ளையில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா? அவர் மட்டுமே இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டாரா?என்பது குறித்து தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×