search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாளை 54வது பிறந்தநாளை கொண்டாடும் திருமாவளவன்
    X

    நாளை 54வது பிறந்தநாளை கொண்டாடும் திருமாவளவன்

    திருமாவளவன் நாளை தனது 54வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை யொட்டி நாளை கட்சி தொண்டர்கள் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி கொண்டாடுகிறார்கள்.
    சென்னை:

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரது பிறந்த நாளை யொட்டி நாளை கட்சி தொண்டர்கள் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகள், அன்னதானம் வழங்கி கொண்டாடுகிறார்கள்.

    கட்சி தலைவர் திருமாவளவனும் தாழ்த்தப்பட்ட மக்கள் நலனுக்காக போராடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிறந்தநாளில் மாநாடு நடத்தி வருகிறார்.

    இந்த ஆண்டு மதசார்பின்மை பாதுகாப்பு மாநாடு சென்னை ராயப்பேட்டையில் நாளை 17-ந் தேதி நடக்கிறது.

    பிறந்த நாளையொட்டி திருமாவளவன் நாளை காலை 9-மணிக்கு அசோக் நகர் வெளிச்சம் அலுவலகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    அதனையடுத்து கோயம்பேட்டில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். காலை 11 மணியளவில் வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் சிலைக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    பிறந்தநாளில் சாந்தோமில் உள்ள சி.எஸ்.ஐ காது கேளாதோர் பள்ளி குழந்தைகளுக்கு திருமாவளவன் உணவு வழங்குகிறார் அவர்களுடன் அமர்ந்து சாப்பிடுகிறார். மயிலாப்பூர் பகுதியில் 1000 குழந்தைகளுக்கு அன்னதானம் மற்றும் ஆடைகள் வழங்குகிறார்.

    கோயம்பேடு மார்க்கெட்டில் 2000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதுபோல விருகம்பாக்கத்தில் மாவட்ட செயலாளர் வி.கே. ஆதவன் தலைமையில் 300 பேருக்கு பிரியாணி வழங்கப்படுகிறது.

    பின்னர் அசோக்நகர் அம்பேத்கர் திடலில் தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெறுகிறார். தமிழகதின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களிடம் இருந்து வாழ்த்துக்களை பெறுகிறார்

    பின்னர் மாலையில் திருமாவளவன் தலைமையில் மதசார்பின்மை மாநாடு நடக்கிறது. புதுவை சித்தன் கலைநிகழ்ச்சியுடன் தொடங்கும் அந்த மாநாட்டில் கவிஞர் இன்குலாப் கவியரங்கம் நடக்கிறது.

    மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி. ராமகிருஷ்ணன், இரா. முத்தரசன் ஆகியோர் சிறப்புரையாற்றுகிறார்கள்.

    மாநாட்டில் பொதுச் செயலாளர்கள் சிந்தனை செல்வன், ரவிக்குமார், பொருளாளர் முகம்மது யூசுப் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் தொகுதி செயலாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    Next Story
    ×