என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராலிம்பிக் நீச்சல் போட்டி: புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சாதனை
    X

    பாராலிம்பிக் நீச்சல் போட்டி: புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சாதனை

    பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சாதனை படைத்துள்ளனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட புதுவாழ்வு திட்ட மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர்களை நேரில் அழைத்து பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட கலெக்டர் கணேஷ் வழங்கினார். பின்னர் அவர் கூறியதாவது:–

    தமிழ்நாடு முதலமைச்சர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் புதுவாழ்வு திட்டத்தின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி செயல்படுத்தி வருகிறார். இதன்படி புதுவாழ்வு திட்டமானது கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்காக 2006 முதல் சிறப்பாக செயலாற்றி வருகிறது. இத்திட்டம் மக்களை கொண்டே செயற்படுத்தும் திட்டமாகும்.

    இத்திட்டத்தில் மாற்றுத்திறனாளி களுக்கென்று சிறப்புக் கவனம் செலுத்தி அவர்களது வாழ்க்கையை செம்மைப் படுத்தியும், மறுவாழ்வு கொடுத்தும் வருகின்றது. பிற துறைகளுடன் இணைந்து பிரதான நீரோட்டத்தில் மாற்றுத்திறனாளிகளையும் இணைத்துள்ளது. மறுவாழ்வுப் பணிகள், வங்கி இணைப்பு, தொழில் பயிற்சிகள், சமூக நலத்திட்டங்கள் மற்றும் தனிநபர் தொழிற்கடன்கள் போன்றவை இதில் அடங்கும்.

    மாற்றுத் திறனாளிகளின் தனித்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில் மாற்றுத்திறனாளி களுக்கான 4வது மாநில அளவிலான பாராலிம்பிக் நீச்சல் போட்டி தேனி மாவட்டத்தில் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தின் சார்பாக புதுவாழ்வு திட்டம் செயல்படும் பகுதிகளிலிருந்து 26 மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.

    இதில் 35 தங்கம், 16 வெள்ளி மற்றும் 4 வெண்கலப்பதக்கம் வென்று மாநில அளவில் முதலிடம் பிடித்து ஒட்டு மொத்த சாம்பியன் ஷிப் பதக்கத்தினை பெற்றனர். மேலும், 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் மாநில அளவில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் 2ம் இடம் பிடித்தனர்.மேலும் வருகின்ற நவம்பர் மாதம் நடைபெறும் தேசிய அளவிலான பாராலிம்பிக் போட்டியிலும் முதல் இடத்தினை பிடித்து மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்ப்பதுடன் இப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு புதுவாழ்வு திட்டம், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து பயிற்சி அளிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. மேலும் பதக்கம் வென்ற மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.3000 வீதம் வழங்க உத்தர விடப்பட்டுள்ளது . இவ்வாறு கலெக்டர் கூறினார். இந்நிகழ்ச்சியில் புதுவாழ்வு திட்ட மாவட்ட மேலாளர் வசுமதி, உதவி திட்ட மேலாளர்கள் கோபால், செந்தில் முருகன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×