என் மலர்
செய்திகள்

ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
மயிலாடுதுறை:
நாகை மாவட்டம் செம்பனார் கோவில் அருகே உள்ள மேமாத்தூர் பகுதியில் எந்திர நடவு செய்வதால் பாதிக்கப்பட்ட விவசாய கூலி தொழிலாளிகள் எந்திர நடவுக்கு தடை விதித்து கைகளால் நடவு செயவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இது தொடர்பாக அதிகாரிகள் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார், ஆனால் தொடர்ந்து அங்கு எந்திர நடவு நடைபெற்று வருகிறது.
இதைத் தொடர்ந்து மேமாத்தூர் விவசாயிகள் மயிலாடுதுறையில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர். இந்த போராட்டத்துக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் ஆதரவு தெரிவித்தது.
அதன்படி மயிலாடுதுறை ஆர்டி.ஓ. அலுவலகம் முன்பு மேமாத்தூர்விவசாய தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டு இன்று காலை முற்றுகை போராட்டம் நடத்தினர். மயிலாடுதுறை விவசாய சங்க தலைவர் ஸ்டாலின் தலைமை தாங்கினார்.இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் திருநாவுக்கரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. மாரிமுத்து நாகை மாலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எந்திர நடவுக்கு தடை விதிக்க வேண்டும். கூலி தொழிலாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெற வேண்டும் ஆகிய கோரிக்கைகை வலியுறுத்தி தொடர் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று அவர்கள் கூறினர்.
இதையொட்டி திருச்சி போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் தலைமையில் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.






