என் மலர்
செய்திகள்

வேதாரண்யம் அருகே முன்விரோதத்தில் விவசாயிக்கு கத்திக்குத்து: ஒருவர் கைது
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினம் காவல் சரகம், புல்வெளி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன் (50). அதே ஊரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (52). இருவரும் பக்கத்து பக்கத்து வீட்டைச் சேர்ந்த விவசாயிகள் ஆவார்.
இவர்களுக்குள் நிலப்பிரச்சினை சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று தமிழ்செல்வத்தின் பசுங்கன்று குட்டியை கல்லை வீசி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து ராஜேந்திரனை தமிழ்செல்வன் கேட்டபோது ஒருவருக்கொருவர் தரக்குறைவாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் கத்தியால் தமிழ்செல்வனை குத்தியுள்ளார்.
படுகாயமடைந்த தமிழ்செல்வன் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் கரியாப்பட்டினம் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தார்.






