என் மலர்tooltip icon

    செய்திகள்

    மனைவியின் பிறந்த நாள் சேலையில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை: சேர்ந்து வாழ மறுத்ததால் விபரீதம்
    X

    மனைவியின் பிறந்த நாள் சேலையில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை: சேர்ந்து வாழ மறுத்ததால் விபரீதம்

    மனைவிக்கு பிறந்த நாளுக்கு எடுத்து கொடுத்த சேலையில் தூக்கு போட்டு வாலிபர் தற்கொலை செய்த கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கருங்கல் பாளையம் விநாயகர் கோவில் வீதியை சேர்ந்தவர் கலை செல்வன் (வயது 25). டிராவல்ஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பவித்ரா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 5 மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இவர்கள் இருவரும் சந்தோ‌ஷமாக குடும்பம் நடத்தி வந்தனர். கடந்த 18–ந் தேதி பவித்ராவுக்கு பிறந்த நாள் வந்தது. இதற்காக கலைசெல்வன் தனது மனைவிக்கு ஆசையாக சேலை எடுத்து கொடுத்தார்.

    தனது கணவன் தன் மேல் உள்ள பிரியத்தினால் ஆசையுடன் எடுத்து கொடுத்த சேலையை கட்டிய பவித்ரா கணவனுடன் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

    இந்த நிலையில் அவர்களது வாழ்க்கையில் புயல் வீச தொடங்கியது. கலைச் செல்வன்–பவித்ரா இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அவர்கள் அடிக்கடி தகராறு செய்து கொண்டனர்.

    இதனால் பவித்ரா கோபித்து கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார். அவரை தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி கலைச்செல்வன் அழைத்தார். ஆனால் பவித்ரா மறுத்து விட்டார்.

    இதனால் கலைச் செல்வன் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்தார். இதை தொடர்ந்து தனது மனைவியின் பிறந்த நாளுக்கு எடுத்து கொடுத்த சேலையால் தனது வீட்டில் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து கருங்கல் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×