என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருமயம் அருகே பிளஸ்–2 மாணவியை கடத்திய 3 பேர் கைது
    X

    திருமயம் அருகே பிளஸ்–2 மாணவியை கடத்திய 3 பேர் கைது

    திருமயம் அருகே பிளஸ்–2 மாணவியை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.

    திருமயம்:

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள துளையானூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகள் பிரியங்கா (வயது17). பி.அழகாபுரியில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற போது பழந்தினாம்பட்டியை சேர்ந்த மாதவன் என்பவர் அவரது  நண்பர்களான  காட்டுபாவாபள்ளிவாசலை சேர்ந்த சின்னக்கருப்பன், தேத்தாம்பட்டியை சேர்ந்த அஜீத்குமார் ஆகியோருடன் சேர்ந்து பிரியங்காவை காரில் கடத்தி சென்றார்.

    கார் சிவகங்கை மாவட்டம் நேமத்தான்பட்டி அருகே சென்ற போது  போலீஸ் சோதனைச்சாவடியில், போலீசாரை கண்டதும் பிரியங்காவை காரில் இருந்து கீழே தள்ளி விட்டு 3 பேரும் தப்பி சென்று விட்டனர். பின்னர் பிரியங்கா வீட்டுக்கு வந்து நடந்த விவரத்தை கூறினார்.

    இது குறித்து திருமயம் போலீஸ் நிலையத்தில் பிரியங்காவின் தாயார் லட்சுமி புகார் செய்தார். அதன் பேரில் திருமயம் போலீசார் , மாதவன்  மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.

    இந்நிலையில்  காட்டு பாவாபள்ளிவாசல் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 3 பேரையும் திருமயம் போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். அவர்கள் எதற்காக பிரியங்காவை கடத்தினர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×