என் மலர்
செய்திகள்

திருப்பத்தூரில் அரசு வங்கியில் ரூ.48 ஆயிரம் திருட்டு
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் உசேன் அம்பலம் தெருவை சேர்ந்தவர் ஜான்டேவிட் (வயது52). இவர் மதுரை ரோட்டில் உள்ள ஒரு பிரபல அரசு வங்கியில் கணக்கு வைத்துள்ளார். நேற்று காலை ஜான்டேவிட் தனது கணக்கில் ரூ.48 ஆயிரம் டெபாசிட் செய்வதற்காக சென்றார். அங்கு டோக்கனை பெற்று கொண்டு அமர்ந்திருந்தார்.
சிறிது நேரத்தில் அவரது டோக்கன் எண் வாசிக்கப்பட்டது. உடனே ஜான்டேவிட் தான் வைத்திருந்த பணப்பையை இருக்கையில் மறந்து வைத்துவிட்டு கவுண்டருக்கு சென்றார். பின்னர் ஞாபகம் வரவே அமர்ந்திருந்த இருக்கையில் சென்று பார்த்தபோது பணப்பை மாயமாகி இருந்தது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து திருப்பத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்- இன்ஸ்பெக்டர் வெங்கட சுப்பிரமணியன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். வங்கியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது மர்ம வாலிபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் பணப்பையை எடுத்து செல்வது பதிவாகி உள்ளது. இதையடுத்து அந்த நபரை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.






